வேலூர்: வேலூரைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர், தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அதேநேரம், அதே பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரும், 30 வயது நபரும் உறவினர்கள் ஆவர்.
இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு அந்த சிறுமி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து சிறுமியை அவரது தாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துள்ளார். அதில், அந்த சிறுமி 8 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, மருத்துவர்கள் விசாரித்ததில், சிறுமியின் கர்ப்பத்துக்கு அந்த 30 வயது நபரான அவரது உறவினர்தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. பின்னர், இது குறித்து மருத்துவர்கள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து, வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அந்நபரை கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து, இந்த வழக்கு மீதான விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 30 வயது உறவினர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், சிறுமியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், இந்த சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பணிப்பெண் கொடுமை; தம்பதி மீது வழக்குப் பதிவு.. திருமாவளவன் கடும் கண்டனம் - பல்லாவரம் எம்எல்ஏ ரியாக்ஷன் என்ன?