கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், ரயில்வே தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் அதிகமாக கொள்ளைச் சம்பவங்கள் (வீடுகளில் கொள்ளை) நிகழ்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டதன் பேரிலும், வழிகாட்டுதலின் அடிப்படையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு 3 மாதங்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
காவல் துணை ஆணையர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) அந்த விசாரணையில், இந்த வழக்கில் மூளையாகச் செயல்பட்டு வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராடுமேன் என்ற மூர்த்தி என்பவரை கோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மண்டல காவல் துணை ஆணையர் ஸ்டாலின், “கைது செய்யப்பட்ட ராடுமேன் என்ற மூர்த்தி என்பவர் மீது கோவையில் மட்டும் 18 கொள்ளை வழக்குகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் 68 வழக்குகள் உள்ளன. அதில் அடிதடி வழக்குகளும் உள்ளன.
இவரது குழுவில் ஏழு பேர் இருக்கிறார்கள். தற்போது இவரையும், அம்சராஜ் என்பவரையும் கைது செய்துள்ளோம்.
அம்சராஜ் என்பவர் மூர்த்தி உடன் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுபவர். முகமூடி அணிந்து கொண்டு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுவார்.
ராடை கொண்டு கதவை உடைத்தால் சத்தம் அதிகமாக வெளியே வராது என்பதால் அதனை பயன்படுத்தி இருக்கலாம். ஒட்டன்சத்திரம், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரும் இவர்தான். இவர் மீது சிங்காநல்லூர், பீளமேடு, ராமநாதபுரம், துடியலூர் ஆகிய காவல் நிலையங்களில் அதிகமான வழக்குகள் உள்ளன.
தமிழகம் முழுவதும் சுமார் 1,500 சவரன் நகைகள், கோவை மாவட்டத்தில் மட்டும் 376 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளார். அதுமட்டுமின்றி இரண்டு கார்கள், 13 லட்சம் விலை மதிப்புள்ள ஒரு பைக் மற்றும் பணத்தையும் கொள்ளை அடித்து உள்ளனர். கொள்ளை அடிக்கும் நகைகளை உருக்கி விற்று, அதில் வரும் பணத்தை வைத்து ராஜபாளையம் பகுதியில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்பின்னிங் மில் ஒன்றை வாங்கி உள்ளார். ரூ.13 லட்சம் பைக் மற்றும் இரண்டு கார்களை பறிமுதல் செய்து விட்டோம். இவரது மனைவி இவர் செய்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்துள்ளார்.
ராஜபாளையம் காவல்துறையினர் சுரேஷ் என்பவரை பிடித்துள்ளனர். மீதமுள்ள மூன்று நபர்களை பிடிக்க வேண்டும். மேலும், பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்து கிடைக்கப் பெற்ற சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கும் பொழுது, அவர் முகமூடி அணிந்து இருந்ததால் ஒவ்வொரு சிசிடிவியிலும் பதிவான கண், வாய் உள்ளிட்டவற்றை ஓவியமாக வரைந்து அதன் அடிப்படையில் தேட ஆரம்பித்து இவரை கைது செய்துள்ளோம் என கூறினார்.
இதையும் படிங்க:2019 நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கு; என்டிஏவுக்கு கெடு விதித்த உயர் நீதிமன்றக்கிளை! - NEET 2019 exam Impersonation issue