சென்னை:விருதுநகர் மாவட்டம் சேவல்பட்டியை சேர்ந்த பாண்டியன் (வயது 29) சென்னையில் கேமரா மேன் ஆக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (24). இந்த தம்பதி இரு சக்கர வாகனத்தில் நேற்று மதுரவாயலில் இருந்து திருவேற்காடு நோக்கி சென்று கொண்டிருந்த போது, சாலையில் வந்த கனரக கண்டெய்னர் வாகனத்திற்கும், மதுரவாயல் பறக்கும் பாலம் பணிக்காக சாலையின் நடுவில் இருந்த தடுப்பிற்கும் இடையே சிக்கி கீழே விழுந்துள்ளனர்.
இதையடுத்து கனரக வாகனத்தின் பின் சக்கரங்கள் இருவரின் மீதும் ஏறி இறங்கியது. இந்த கொடூர விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.