சென்னை: தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பல வகையான தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் புழக்கத்தில் இருக்கும் நிலையில், தற்போது மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொருளை சுயமாக உருவாக்கும் முயற்சியில் பட்டதாரி இளைஞர்கள் செயல்பட்டு கைதாகி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூரில் சிலர் போதை பொருள் தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு கொடுங்கையூரை சேர்ந்த பிரவீன் பிரனவ், மீஞ்சூர் பகுதியை சேர்ந்த கிஷோர், ஞானபாண்டியன், கோலப்பஞ்சேரி பகுதியை சேர்ந்த நவீன், மணலி பகுதியை சேர்ந்த தனுஷ், தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த பிளம்மிங் பிரான்சிஸ், செங்குன்றம் பகுதியை சேர்ந்த அருண்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
இதில் பிரவீன் பிரனவ், நவீன், கிஷோர் ஆகியோர் இன்ஜினியரிங் பட்டதாரிகள் ஆவர். மேலும் தனுஷ் பிஎஸ்சி பட்டதாரி ஆவார். ஞானபாண்டியன் பிஎஸ்சி வேதியியல் படிப்பில் 2022 ஆம் ஆண்டு தங்க மெடல் பெற்று பட்டம் பெற்றவர் ஆவார்.
இதையும் படிங்க:வரதட்சணை கொடுமை.. திருமணமான ஆறே மாதத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு.. வெளியான பகீர் ஆடியோ!
மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரவீன், கிஷோர், நவீன், தனுஷ் ஆகியோர் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த அருண் என்பவரிடம் 250 கிராம் எடையுள்ள மெத்தம்பெட்டமைனை ரூ. 3 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளனர்.
பின்பு அதனை 1 கிராம் 2 ஆயிரம் ரூபாய்க்கு பிளமிங் பிரான்சிஸ் மற்றும் ஆகாஷ் ஆகியோர்களுக்கு விற்பனை செய்துள்ளார்கள். மெத்தம்பெட்டமைனை பயன்படுத்திய பிளமிங் பிரான்சிஸ் மற்றும் ஆகாஷ் அது போலியானது என்று கூறியுள்ளனர்.
அதனால் பிரவீன், கிஷோர், நவீன், தனுஷ் ஆகியோர்கள் சேர்ந்து எம்எஸ்சி கெமிஸ்ட்ரி படித்து வரும் ஞான பாண்டியன் என்பவரிடம் மெத்தம்பெட்டமைன் தயாரிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். பின்னர் 5 நபர்களும் சேர்ந்து செளகார்பேட்டையில் உள்ள கெமிக்கல் கடையில் கெமிக்கல் பொருட்களை வாங்கி வந்து பிரவீன் வீட்டில் ஆய்வகம் நடத்தி மெத்தம்பெட்டமைன் தயாரிக்கும் முறையை சோதனை செய்து பார்த்ததும் தெரிய வந்தது.
மேலும், அவர்களிடம் இருந்து 245 கிராம் மெத்தம்பெட்டமைன், 2 லேப்டாப்கள், 7 செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட 7 பேர் மீதும் வழக்குபதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்