திருச்சி:கோயம்புத்தூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் ஆனந்த் மற்றும் லோகேஸ்வரன். இவர்கள் இருவரும் கோவையிலிருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு கும்பகோணம் புறப்பட்டுள்ளனர். பின்னர் கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி இறக்கி விட்டு ரூ.50 லட்சத்து 68 ஆயிரத்து ரூபாய் பணம் பெற்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு மீண்டும் கோவையை நோக்கிப் புறப்பட்டுள்ளனர். சரியாக திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்காரபாளையம் அருகே வந்த போது லாரியை நிறுத்துவிட்டு ஓட்டுநர்கள் இருவரும் உணவு அருந்தச் சென்றுள்ளனர்.
பின்னர் லாரியை வந்து பார்க்கும் போது அதிலிருந்து அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அரிவாளுடன் இறங்கி ஓடியுள்ளனர். அவர்களை பிடிக்க முயன்ற போது காரில் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து லாரியின் உள்ளே பார்த்தபோது ரூ.50 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெட்டவாய்த்தலை காவல் நிலைய போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் உத்தரவின் பேரில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று (சனிக்கிழமை) திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண்ணிற்கு நவலூர் குட்டப்பட்டு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலர் காரில் சுற்றி திரிவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து குட்டப்பட்டு விரைந்த தனிப்படை போலீசார், அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த காரின் அருகே சென்றுள்ளனர். அப்போது காரில் இருந்த ஐந்து பேரும் அரியாற்று பாலத்திலிருந்து குதித்துத் தப்ப முயன்றுள்ளனர்.
இதனையறிந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவத்தின் போது தப்பியோட முயன்ற 3 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார், அதே பகுதியை சேர்ந்த போஸ் (எ)இசக்கிமுத்து, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த வெள்ளைபாண்டி , காடுவெட்டியை சேர்ந்த முத்து மணிகண்டன் மற்றும் மதுரையைச் சேர்ந்த சூர்யா (எ) உதயநிதி என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள்தான் லாரியில் இருந்து ரூ.50 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 5 பேரையும் கைது செய்த தனிப்படை போலீசார், அவர்களிடம் இருந்து 26 லட்சம் ரூபாய் பணம் மற்றும் குற்ற சம்பவத்தில் பயன்படுத்திய காரினை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:பிறந்து 8 நாட்களே ஆன குழந்தை ரூ.3 லட்சத்திற்கு விற்பனை.. தந்தை உட்பட 4 பேர் கைது!