பாரிஸ்:பாரிஸ் ஒலிம்பிக் நேற்றைய போட்டியில் இந்திய ஹாக்கி அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் கால் பகுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகித்தது. அதன் பிறகு இந்திய அணி மெதுவாக ஆட்டத்திற்குள் வரத் தொடங்கியது. இரண்டாவது கால் பகுதியில் இந்திய அணியின் வீரர் மந்தீப் சிங் தனக்குக் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார். இதன் மூலம் 2ஆம் கால் பகுதி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
இதற்கு அடுத்தபடியாக இந்தியா வீரர் விவேக் பிரசாத் ஆட்டத்தின் 34 வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார். மூன்றாவது கால் பகுதி முடிவில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. அடுத்த நடந்த நான்காவது கால் பகுதியில் நியூசிலாந்து அணி ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் கோலை பதிவு செய்தது. இதனால் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தது.
நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய ஹாக்கி அணி: இந்நிலையில் ஹர்மன்பிரீத் சிங் தனக்கு அளிக்கப்பட்ட பெனால்டி கார்னர் வாய்ப்பினை பயன்படுத்தி கோல் அடித்ததால் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தைத் தோற்கடித்தது. அதற்கு அடுத்தப்படியாக வருகின்ற 29ஆம் தேதி இந்திய அணி அர்ஜெண்டினா அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.