புதுடெல்லி: கடந்த 2023-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 பந்தயம் தொடர்பாக தனியார் நிறுவனம் தமிழ்நாடு அரசுக்கு ரூ.42 கோடி செலுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
சென்னை தீவுத் திடலை சுற்றி கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 9 முதல் 10-ம் தேதி வரை ஃபார்முலா 4 கார் பந்தம் நடைபெற்றது. இதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யவில்லை, ஒலி மாசுபாடு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் மற்றும் ஒரு தனியார் நிறுவனம் பயனடையும் வகையில் அரசு நிதி பயன்படுத்தப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான ரேசிங் புரமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், தமிழ்நாடு அரசு செய்த செலவுகளுக்காக அரசுக்கு ரூ.42 கோடியை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
கார் பந்தயத்தை ஒரு விளையாட்டாக ஊக்குவிப்பதற்கான அரசாங்கத்தின் கொள்கை முடிவில் தலையிட மாட்டோம் என்று உயர் நீதிமன்றம் கூறிய போதிலும், ஒரு தனியார் நிறுவனம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது, மாநில அரசின் வேலையை எளிதாக்குவதற்காக மட்டுமே என்றும், வருவாய் மற்றும் லாபம் அந்த தனியார் நிறுவனத்தை மட்டுமே சேரும் என்றும் கூறியிருந்தது.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்த நிபந்தனைகள் தொடர்பாக எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காத ரேசிங் புரமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அரசு செலவழித்த ரூ.42 கோடியை திருப்பிச் செலுத்த உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தது.
இந்த மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ரேசிங் புரமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (RPPL)-க்கும் இடையிலான ஒப்பந்த விதிமுறைகளில் தலையிட்டதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றம் அதன் அதிகார வரம்பை "மீறிவிட்டதாக" நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
"விளையாட்டு நிகழ்ச்சியை நடத்துவது அரசின் கொள்கை முடிவு என்று உயர் நீதிமன்றம் திருப்தி அடைந்தவுடன், அரசுக்கும் ரேசிங் புரமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்-க்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) குறிப்பிட்ட விதிமுறைகளில் தலையிட்டிருக்க கூடாது" என்று நீதிபதி நரசிம்ஹா தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்காக, RPPL நிறுவனம் ஆகஸ்ட் 16, 2023 அன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் (SDAT) மூன்று ஆண்டுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, இந்த நிகழ்விற்கு RPPL நிறுவனம் ரூ.202 கோடி செலவிட உறுதியளித்தது. அதே நேரத்தில் உரிமம் கட்டணம், சாலை மேம்பாடுகள் மற்றும் பிற இதர செலவுகள் உட்பட ரூ.42 கோடி செலவினங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.