தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / education-and-career

ஒற்றை இலக்கத்தில் மாணவர் சேர்க்கை; மதுரை காமராஜர் பல்கலையின் இந்த பரிதாப நிலைக்கு என்ன காரணம்? - MADURAI KAMARAJ UNIVERSITY - MADURAI KAMARAJ UNIVERSITY

MKU student admission: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் ஒற்றை இலக்கில் மாணவர் சேர்க்கையே நடைபெற்றுள்ளது. இதற்கான காரணம் என்ன? நிர்வாகத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன? என்பது குறித்து 'காமராஜர் பல்கலைக்கழகத்தைப் பாதுகாப்போம்' இயக்கத்தின் தலைவர் முனைவர் சீனிவாசன் கூறுவதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

காமராஜர் பல்கலைக்கழகத்தைப் பாதுகாப்போம் இயக்கத்தின் தலைவர் சீனிவாசன்
காமராஜர் பல்கலைக்கழகத்தைப் பாதுகாப்போம் இயக்கத்தின் தலைவர் சீனிவாசன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2024, 5:28 PM IST

Updated : Aug 27, 2024, 7:17 PM IST

மதுரை:நிதி, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் தடுமாறிக் கொண்டிருக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தற்போது மாணவர் சேர்க்கை குறைவால் மேலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு மாத ஓய்வூதியத்தை தடையின்றி தொடர்ந்து வழங்க நிரந்தரத் தீர்வு வேண்டும் என ஓய்வூதியதாரர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தமிழக அரசின் 'கருணை'யை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்க வேண்டிய சூழலுக்கு ஒட்டுமொத்த பல்கலைக்கழகமே தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது. பல்வேறு துறைகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. பேராசிரியர்கள், ஊழியர்கள் என மொத்தம் 700 பேர் பணியாற்றும் காமராஜர் பல்கலைக்கழகத்தில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 700க்கும் குறைவாக உள்ளது.

இந்நிலையில், காமராஜர் பல்கலைக்கழகத்தைப் பாதுகாப்போம் இயக்கத்தின் தலைவரும், உயர்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் உறுப்பினருமான முனைவர் சீனிவாசன், ஈடிவி பாரத் தமிழ்நாட்டிற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1966-ல் துவங்கப்பட்டது. 1980களில் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக பெயர் பெற்று விளங்கியது. பேராசிரியர்கள் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், மு.வரதராசனார். வ.சுப.மாணிக்கனார், வா.செ.குழந்தைசாமி போன்றோர் துணைவேந்தர்களாக பணியாற்றினர். அதற்குப் பிறகு பல்கலைக்கழகத்தின் பெருமை கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கியது.

பல்கலைக்கழகத்திற்கு முன்னுரிமை:காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்துள்ளது. மாணவர் சேர்க்கையில் காமராஜர் பல்கலைக்கழகம் முதலில் இருக்கும். 1980களில் ஒற்றைச் சாளர முறை பின்பற்றப்பட்டது. இதில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தில், மூன்று முன்னுரிமைகள் அளிக்கப்படும்.

உள்மதிப்பீட்டு முறை:பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள் தகுதிமிக்கவர்களாக, ஆராய்ச்சி வல்லுநர்களாக இருந்தனர். இதனால் மாணவர்களின் முதல் முன்னுரிமை பல்கலைக்கழகமாக இருந்தது. தன்னாட்சிக் கல்லூரிகள் உருவாகிய பின்னர், உள் மதிப்பெண், வெளி மதிப்பெண் முறை காரணமாக மாணவர்கள் தன்னாட்சிக் கல்லூரிகளுக்கு முன்னுரிமை அளிக்க ஆரம்பித்தனர். இதன் காரணமாக பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது.

தகுதியான பேராசிரியர்கள் இல்லை: சேர்க்கைக்கான விண்ணப்பங்களை காலம் தாழ்த்தி விநியோகிப்பது பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை குறைவுக்கு முதன்மை காரணமாகும். ஆசிரியர்கள் நியமனத்தில் மிகவும் தொய்வான நிலை உள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர்களின் தரம் என்பது மாணவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டது. கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு தரமான ஆசிரியர்கள் நியமனம் குறித்த பொதுக்கருத்து நல்லவிதமாக இல்லை. இதன் காரணமாக மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு விரும்புவதில்லை.

ஆசிரியர்களுக்கு ஊதியமில்லை:பணியில் இருக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு கடந்த மூன்றாண்டுகளாக முறையான ஊதியமில்லை. அவர்களது கல்விப்பணி எவ்வாறு நடைபெறும்? இவையெல்லாம் மாணவர்கள் மத்தியில் எதிர்மறை மனநிலையை உருவாக்குகின்றன. மாணவர் சேர்க்கையையும், தரத்தையும் உயர்த்த வேண்டுமென்றால் தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இந்த நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசின் பங்கு:கடந்த 1966-ஆம் ஆண்டு காமராஜர் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டபோது, கிராமப்புறம் சார்ந்த பல்கலைக்கழகமாகவே அறியப்பட்டது. இன்று பல்கலைக்கழகத்தின் நிலை மிகக் கீழே சென்றதற்கு தமிழக அரசும் ஒரு காரணம். கடந்த 1993-ஆம் ஆண்டிலிருந்து 2023-ஆம் ஆண்டு வரை கடந்த 30 ஆண்டுகளாக எழுப்பப்பட்ட தணிக்கை ஆட்சேபணைகள் பல்கலைக்கழக வீழ்ச்சிக்கு காரணம்.

நிர்வாகக் குறைபாடு:நிர்வாகக் குறைபாடுகளின் காரணமாகவே தற்போது மாணவர் சேர்க்கை குறைந்திருக்கிறது. ஆகையால் பல்கலைக்கழகத்தைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மட்டுமன்றி, தமிழக அரசுக்கும் உண்டு. இணைந்த கூட்டுப் பொறுப்பால் மட்டுமே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தரத்தையும் நிர்வாகத்தையும், மீட்டெடுக்க முடியும்” இவ்வாறு அவர் கூரினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:புறப்பட்டாரா ஸ்டாலின்? அமெரிக்காவில் 17 நாட்கள்.. முதல்வர் பயணத்தை உற்றுநோக்கும் எதிர்க்கட்சிகள்!

Last Updated : Aug 27, 2024, 7:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details