சென்னை:சென்னை ஐஐடியில் படித்த மாணவர்களில் 90 சதவீதம் பேர், கடந்த இரண்டாண்டுகளாக பிடெக் மற்றும் இரட்டைப் பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு நடைபெறும் நேரத்திலேயே வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். 2024 பட்டமளிப்பு விழாவிற்கு இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், நடப்பாண்டிலும் சென்னை ஐஐடி இந்த சாதனையைப் படைக்க உள்ளது. வரும் கல்வியாண்டு முதல் ஆராய்ச்சியாளர் வேலைவாய்ப்புப் பிரிவு புதிததாக துவக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஏப்ரல் 30ஆம் தேதி நிலவரப்படி, சென்னை ஐஐடியில் நடப்பாண்டில் 80 சதவீத்திற்கும் மேற்பட்ட பிடெக், இரட்டைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கும், 75 சதவீதத்திற்கும் அதிகமான முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 2023-24ம் ஆண்டில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வளாக (campus interview) வேலைவாய்ப்புகளின்போது 256 நிறுவனங்களில் 1,091 பேர் பணியமர்த்தப்பட்டனர். இதுதவிர, மொத்தமுள்ள 300 முன்வேலைவாய்ப்பு பணிகளுக்கு 235 பேர் ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.
சர்வதேச அளவில் வாய்ப்பு: முதல் மற்றும் இரண்டாம் கட்ட வளாக வேலைவாய்ப்புகளின்போது ஜப்பான், ஐரோப்பா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் 44 சர்வதேச வாய்ப்புகளையும், 85 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 183 வேலைவாய்ப்புகளையும் வழங்கியுள்ளன. இவ்வாறு பணியமர்த்தப்பட்ட 43 சதவீதம் பேர் முக்கிய துறைகளிலும், 20 சதவீதம் பேர் மென்பொருள் துறையிலும், 10 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் பகுப்பாய்வு, நிதி, ஆலோசனை மற்றும் தரவு அறிவியல் துறைகளிலும் வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றனர்.
பிஎச்டி ஆராய்ச்சியாளர்களுக்கான வேலைவாய்ப்புகளை எடுத்துக்கொண்டால், பிஎச்டி என்பது வழக்கமான பாடநெறி அடிப்படையிலான படிப்பு அல்ல. அதற்கென குறிப்பிட்ட கால அளவும் கிடையாது. எனவே அவர்களின் வேலைவாய்ப்புக்கான காலஅளவு பாடநெறி அடிப்படையிலான பாடத்திட்டத்திற்கு பொருந்தாது. பிஎச்டி மாணவர்கள் பலரும் தங்களின் பிஎச்டி ஆய்வறிக்கையை பட்டமளிப்புக்கு நெருக்கத்தில் நிறைவு செய்கின்றனர்.