மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரிகுறைப்பு எதிரொலியால் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.52,400-க்கு விற்பனை; வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3.50 காசுகள் குறைந்து ரூ.92.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது
மத்திய பட்ஜெட் 2024: நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன? - Budget 2024 - BUDGET 2024
Published : Jul 23, 2024, 9:27 AM IST
|Updated : Jul 23, 2024, 2:02 PM IST
டெல்லி: 18வது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று (ஜூலை 22) தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்கிறார். அமிர்த காலத்தின் தொடக்கமாக பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்த நிலையில் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
LIVE FEED
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2.200 குறைவு!
துறைகள் வாரியாக நிதி ஒதுக்கீடு விபரம்
1.பாதுகாப்பு - ரூ.4.54 லட்சம் கோடி
2.ஊரக வளர்ச்சி - ரூ.2.65 லட்சம் கோடி
3.கல்வி - ரூ.1.25 லட்சம் கோடி
4.தொலைத்தொடர்பு - ரூ.1.16 லட்சம் கோடி
5.மருத்துவம் - ரூ.89,287 கோடி
6.எரிசக்தி - ரூ.68,769 கோடி
7.சமூக நலன் - ரூ.56,501 கோடி
8.வேளாண் துறை - ரூ.1.51 லட்சம் கோடி
9.உள்துறை - ரூ.1.50 லட்சம் கோடி
10. வணிகம், தொழில் - ரூ.47,559 கோடி
புற்றுநோய் மருந்துகளுக்கு வரி விலக்கு
புற்றுநோய் சிகிச்சைக்கான 3 மருந்துகளுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு: நிர்மலா சீதாராமன்
வருமான வரி முறையில் மாற்றம்!
தனிநபர் வருமான வரிச் சலுகையில் நிலையான கழிவு ரூ.75,000-ஆக அதிகரிப்பு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மீன் தீவனங்களுக்கு சுங்கவரி குறைப்பு
இறால் மற்றும் மீன் தீவனங்களுக்கு சுங்க வரி 5% ஆக குறைப்பு - நிர்மலா சீதாராமன்
செல்போன் சுங்கவரி குறைப்பு!
செல்போன் மற்றும் சார்ஜர்களுக்கான சுங்கவரி 15% -ஆக குறைப்பு - நிர்மலா சீதாராமன்
"வருமான வரி கணக்கு தாக்கல் தாமதம் குற்றமல்ல"
வருமான வரி கணக்கு(Income Tax) தாக்கல் செய்ய தாமதமானால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் நடைமுறை ரத்து - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
தங்கம் விலை குறைய வாய்ப்பு!
தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15%-ல் இருந்து 6%-ஆக குறைப்பு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
வெள்ளத் தடுப்புக்கு ரூ.11,500 கோடி
அஸாம், இமாச்சல், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு ரூ.11,500 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
"நிதிப்பற்றாக்குறை 4.5%-ஆக குறைக்க இலக்கு"
2024-25 நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 4.9% ஆக குறையும். 4.5% ஆக குறைக்க இலக்கு; 2024-25 நிதியாண்டுக்கான மூலதன செலவினத்துக்கு ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
"1 கோடி வீடுகளுக்கு தலா 300 யூனிட் மின்சாரம்"
பிரதமரின் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு; இலவச சூரிய ஒளி மின் திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளுக்கு தலா 300 யூனிட் மின்சாரம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
1 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி
நாடு முழுவதும் உள்ள 500 முக்கிய நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி(Internship) அளிக்கப்படும் - அமைச்சர் நிர்மலா சீதாராமன்
"மாநில அரசுகள் குறைக்க வேண்டும்"
மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்
ஆந்திராவுக்கு சிறப்பு நிதி அறிவிப்பு
ஆந்திரப்பிரதேசம் மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் குடிநீர், மின்சாரம், ரயில், சாலை உள்ளிட்ட கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் தலைநகர் அமராவதி மேம்பாட்டிற்காக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
முத்ரா கடன் தொகை உயர்வு
மத்திய அரசின் முத்ரா கடன் உதவித் திட்டத்தில் கடன்பெறும் அளவு ரூ.20 லட்சமாக உயர்வு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு
படிப்பு முடித்து அமைப்பு சார்ந்த துறைகளில் முதன்முறையாக பணிக்குச்சேரும் அனைத்து இளைஞர்களுக்கும் முதல் மாத சம்பளம் நேரடியாக வங்கிக் கணக்கில் அரசால் அனுப்பி வைக்கப்படும். இது மூன்று தவணைகளில் வழங்கப்படும். அதிகபட்சமாக மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் பெறுவோர் வரையிலும் இந்த உதவியைப் பெற தகுதியானவர்கள். அதிகபட்சமாக 15 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் 2 கோடியோ 10 லட்சம் இளைஞர்கள் பயன்பெற உள்ளனர் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்புத் திட்டங்கள்
சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
பீகார் மாநிலத்திற்கு சிறப்புத் திட்டங்கள்
புதிய விமான நிலையம் மற்றும் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும், ரூ.26,000 கோடியில் சாலைகள் அமைக்கப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
"வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை"
2024 நிதிநிலை அறிக்கையில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம்
80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் 'பிஎம் கரீப் அன்ன யோஜனா' திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
"9 திட்டங்களுக்கு முன்னுரிமை"
வேலைவாய்ப்பு திறன் மேம்பாடு, வேளாண் உற்பத்தி அதிகரிப்பு, தொழில் உற்பத்தி, நகர்ப்புற மேம்பாடு, ஆற்றல் மேம்பாடு, சமூக நீதி அடிப்படையிலான மனித வள மேம்பாடு, உட்கட்டமைப்பு, புதுமை ஆராய்ச்சி அதிகரிப்பு, புதிய சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 9 முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
உயர் கல்வி பயில ரூ.10 லட்சம் கடன் உதவி!
உள்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலான கடன் நிதியுதவியை அரசு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!
அடுத்த 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மற்றும் பிற வாய்ப்புகளை எளிதாக்குவதற்கான 5 திட்டங்கள் பிரதமரின் தொகுப்பு திட்டங்களின் கீழ் அறிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் நிதி ஒதுக்கீடு!
நிதி ஆண்டில் வேளாண் துறைகளுக்கு 1.52 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 32 வகையான வயல் மற்றும் தோட்டக்கலை பயிர்களின் புதிய 109 அதிக மகசூல் மற்றும் காலநிலையை தாங்கும் ரகங்கள் விவசாயிகளின் சாகுபடிக்காக வெளியிடப்படும்.
இயற்கை விவசாயம் தொடங்க ஊக்குவிப்பு!
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயம் துவக்க வேண்டிய நிதி உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படும் - நிர்மலா சீதாராமன் !
பணவீக்கம் தொடர் சரிவு!
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதகாவும் அடுத்தடுத்த ஆண்டுகளின் அதன் வளர்ச்சி உச்சத்தை தொடும். நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து சரிந்து வருவதாகவும் கடந்த சில ஆண்டுகளாக 4 சதவீதம் என்கிற அளவில் தொடர்ந்து நிலையாக உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
4 இலக்குகளை நோக்கி பட்ஜெட்..
நாடாளுமன்றத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளபடி ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய 4 வெவ்வேறு இலக்குகளை கவனம் செலுத்தி பட்ஜெட் தயாரிப்பு. விவசாயிகளுக்கு, அனைத்து முக்கிய பயிர்களுக்கும் குறைந்த பட்சம் 50 சதவீத குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெறும் வகையில் பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.
பட்ஜெட் தாக்கல்!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
நாடாளுமன்றம் தொடங்கியது!
நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. சற்று நேரத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.
நாடாளுமன்றம் விரைந்த நிர்மலா சீதாராமன்!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய தனது குழுவினருடன் நாடாளுமன்றம் விரைந்தார்.
பிஎம் கிசான் திட்டத்தில் நிதி உதவி அதிகரிப்பு?
பிரதமரின் கிசான் திட்டத்தின் மூலம் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவியை 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அது குறித்த அறிவிப்பு இன்றைய பட்ஜெட் தாக்கலில் வெளியிடப்படுமா என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
குடியரசு தலைவருடன் சந்திப்பு!
பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு மத்திய நிதி அமைச்சர் நிர்லமா சீதாராமன் தனது நிதி அமைச்சக அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்தார்.
பட்ஜெட் எதிரொலி- பங்குசந்தை உயர்வு!
காலை 11 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பங்குச்சந்தை உயர்ந்துள்ளது. வர்த்தகம் தொடங்கியதுமே மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 239 புள்ளிகள் அதிகரித்து 80 ஆயிரத்து 741 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குசந்தையான நிப்டி 66 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 575 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
என்னென்ன எதிர்பார்க்கலாம்?
வருமான வரி உச்சவரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது 3 லட்ச ரூபாயாக உள்ள வருமான வரி விலக்கு 5 லட்ச ரூபாயாக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
குடியரசுத் தலைவருடன் சந்திப்பு!
நாடாளுமன்றத்தில் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றார்.
நாடாளுமன்றம் விரைந்த நிர்மலா சீதாராமன்!
பட்ஜெட் தாக்கலை அடுத்து நாடாளுமன்றத்தின் வடக்கு பிளாக் பகுதியில் உள்ள மத்திய நிதி அமைச்சகத்தின் அலுவலகம் வந்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது குழுவினருடன் பட்ஜெட் டேப்லெட்டுடன் நிதி அமைச்சகத்திற்கு வெளியே வந்தார்.