கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் அருகேயுள்ள சித்தாமூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராதாகிருஷ்ணன் என்பவர், விழுப்புரம் வாட்ஸ் அப் குழுவில் ஒரு தகவலைப் பகிர்ந்திருந்தார்.
அதில், ”நான் இரண்டு கால்கள், ஒரு கை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவால் எனது குடும்பம் உணவுக்கு வழியின்றி தவித்துவருகிறது. மேலும் இந்தக் குழுவில் உள்ளவர்கள் யாராவது எனக்கு உதவி செய்யுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனைப் பார்த்த விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று அவரிடம் நலம் விசாரித்தார்.
பின்னர் அவரது குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் போன்றவற்றை அளித்தார். காவல் கண்காணிப்பாளரின் இந்தச் செயலுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. சாமானிய மக்களுக்கு எதிராக அதிகாரத்தைச் செலுத்தும் காவலர்களுக்கு மத்தியில், சக மனிதர்கள் மீது அன்பு காட்டும் காவலர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என பொதுமக்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா: முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உதவி எண்கள் அறிவிப்பு!