கரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு பல்வேறு வகையில் மக்களிடையே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும், பெருந்தொற்றுப் பரவலின் விபரீதம் தெரியாமல் பலர் சாலையில் தேவையின்றி சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில், தனித்திருக்காமல் சுற்றுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகை சாலையில் ரங்கோலி ஓவியம் வரைந்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாகை நாலுகால் மண்டபம் அருகே உள்ள சாலை சந்திப்பில் ஊர்காவல் படை. காவல்துறையினர் 10க்கும் மேற்பட்டோர் இந்த ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்டனர். சாலையில் பெரிய அளவில் கரோனா வைரஸ் கிருமியின் உருவம் வரையப்பட்டுள்ளது, அருகிலேயே அதன் பாதிப்பு குறித்து எழுதப்பட்டுள்ளது. மேலும், தேள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் கடித்தால் கூட மருந்து உள்ளது, ஆனால் கரோனா நோய்த் தொற்றுக்கு மருந்து இல்லை என்று ஓவியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சாலையில் வரையப்பட்டு இருக்கும் கரோனா விழிப்புணர்வு குறித்த ஓவியத்தை அவ்வழியே கடந்து செல்பவர்கள் அச்சம் கலந்த வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.