சென்னை: 2020ஆம் ஆண்டு வழங்கப்பட உள்ள ஆஸ்கர் விருதில் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டுள்ள 28 படங்களில் 3 தமிழ் படங்கள் இடம்பிடித்துள்ளன.
திரைத்துறையைப் பொறுத்தவரை மிகவும் உயரிய விருதாக ஆஸ்கர் விருது பார்க்கப்படுகிறது. இந்த விருதுகளில் சிறந்த அயல்நாட்டு படப் பிரிவில் ஹாலிவுட் தவிர மற்ற நாடுகளின் படங்கள் போட்டியிடும். இதிலிருந்து சிறந்த படம் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.
இந்த நிலையில், ஆண்டுதோறும் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு ஒரு படம் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. இதையடுத்து, 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 92ஆவது ஆஸ்கர் விருது விழாவில் 2019ஆம் ஆண்டில் வெளியான படங்களில் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதற்காக நாடு முழுவதும் வெளியான பல்வேறு மொழிப் படங்களிலிருந்து, 28 படங்கள் ஆஸ்கர் விருதில் போட்டியிடுவதற்கான பரிந்துரைப் பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.
இதையடுத்து இந்தப் பட்டியலில் தமிழில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்ற 'சூப்பர் டீலக்ஸ்', 'வடசென்னை', 'ஒத்த செருப்பு சைஸ் 7' ஆகிய மூன்று படங்கள் இடம்பெற்றுள்ளன.
சூப்பர் டீலக்ஸ்
கடந்த மார்ச் மாதம் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், மிஷ்கின், சமந்தா, காயத்ரி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வித்தியாசமான திரைக்கதை அமைப்புடன் வந்த 'சூப்பர் டீலக்ஸ்' ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. நான்கு கதைகள் ஒரு புள்ளியில் சந்திப்பது போன்ற பல்வேறு சுவாரஸ்ய திருப்பங்களுடன் அமைந்திருந்த இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
வடசென்னை
கடந்த ஆண்டு அக்டோபரில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து க்ரைம், ஆக்ஷன் கலந்த படமாக இருந்தது வடசென்னை. குறிப்பிட்ட பிரிவினரின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டியிருந்த இந்தப் படத்தில் அனைவரது நடிப்பும் வெகுவாகப் பேசப்பட்டது. இதன் இரண்டாம் பாகமும் விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது.
ஒத்த செருப்பு சைஸ் 7
ஒரே ஒரு கேரக்டர் படம் முழுவதும் தோன்றும் இந்திய சினிமாவின் முதல் முயற்சியாக ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து நடித்திருப்பவர் பார்த்திபன். புதுமையான இந்த முயற்சிக்கு திரைத்துறையினர் பாராட்டுகளை குவித்து வருவதுடன், படம் தொடர்பாக பலர் நேர்மறையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இந்தப் படங்களைத் தவிர பாலிவுட், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களும் இந்தப்போட்டி பட்டியலில் உள்ளன. ஆஸ்கர் போட்டிக்காக தேர்வு செய்யப்படும், இந்தியப் படம் குறித்து நாளை அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.