இது தொடர்பாக ஈராக் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “வீழ்த்தப்பட்ட நிலையில் அதன் எச்சங்களை மறுசீரமைத்து மீண்டும் ஒருங்கிணைய துடிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை முற்றிலுமாக வேரறுக்க, இறுதிப்போரை நாம் நடத்தவுள்ளோம்.
ஹஷ்த் அல்-ஷாபி போராளிகள் ராணுவத்தில் உள்ள தங்களது சகோதரர்களான பாதுகாப்புப் படையினருடன் இணைந்து இந்தத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்துவதில் முன்னணி வகிப்பார்கள்.
2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை நடைபெற்ற நாடு முழுவதும் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான ஈராக் பாதுகாப்புப் படையினர் நடத்திய போரில் பயங்கரவாதிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டனர்.
அதிலிருந்து ஈராக்கின் பாதுகாப்பு நிலைமை மேம்பட்டுவருகிறது. இருப்பினும், சிதறிய ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் நகர்ப்புறங்களிலிருந்து பாலைவனங்கள், கரடுமுரடான பகுதிகளில் மறைந்திருந்து பாதுகாப்புப் படைகள், பொதுமக்கள் மீது அடிக்கடி கொரில்லா தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்திலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த சன்னி மாகாணங்களில், பொதுமக்கள் மீதான தாக்குதல்களைப் பயங்கரவாதிகள் தீவிரப்படுத்திவருகின்றனர்.
இதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஈராக் படைகள் பெரும் தாக்குதலை நடத்தும், வரவிருக்கும் தாக்குதலில் துணை ராணுவ ஹஷ்த் அல்-ஷாபி வீரர்கள் பாதுகாப்புப் படைகளில் முன்னணியில் இருப்பார்கள்” எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, துணை ராணுவப்படையான ஹஷ்த் அல்-ஷாபியின் தலைமையகத்திற்கு ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வானில் எப்போது திரும்பும் இயல்புநிலை?