வரும் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் விமான சேவையை மே 31ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க, அரசு கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வருபவர்களுக்கு அதிகளவில் கரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு மிகுதியாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இது போன்ற சூழலில் வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் பயணிகள் வந்தால், அவர்களை தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்வது மாநில அரசுக்கு சவால் நிறைந்த பணியாக பார்க்கப்படுகிறது. மேலும், போக்குவரத்து வசதி இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பாத நிலையில், தொடர்ந்து விமானப் பயணிகள் வந்தால், அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்ய வேண்டியிருக்கும்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பு குறைவாக உள்ள போதிலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. பெரும்பாலான விமானங்கள் சென்னைக்கு இயக்கப்படும் என்பதாலும், பிற மாவட்டங்களில் விமானம் இயக்கப்பட்டாலும் ஏராளமான பயணிகள் சென்னைக்கு வருவார்கள் என்பதாலும், தமிழ்நாடு அரசு மே 31ஆம் தேதி வரை விமானப் போக்குவரத்தைத் தொடங்க வேண்டாம் என விமானப் போக்குவரத்துத் துறையிடம் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, தமிழ்நாட்டுக்கு ரயில் சேவையை இயக்குவதைத் தள்ளி வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.
இதையும் படிங்க: சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் ராதாகிருஷ்ணன் ஆய்வு!