100 நாள் பணி நிறைவை கும்மியடித்து கொண்டாடிய பெண்கள்!
புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே ஆலவயல் கிராமத்தில், 700க்கும் மேற்பட்ட பெண்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு 2022-2023 ஆம் ஆண்டுக்கான கடைசி பணி நாளாக நேற்று புதன்கிழமை அமைந்தது.
எனவே, அதனைக் கொண்டாட முடிவு செய்த 100 நாள் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து ஆலவயல் மணத்தொண்டியில் உள்ள முருகன் கோயிலில் அனைவரும் உடல் நலத்துடன் இருக்க வேண்டும் எனவும், தங்கள் பகுதிகளில் மழை பெய்ய வேண்டும் எனவும், அடுத்த வருடத்திற்கான பணி இனிமையாக அமைய வேண்டும் எனவும் பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
மேலும், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா சக்திவேல் முன்னிலையில் இந்த சிறப்பு வழிபாட்டைச் செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.அதோடு கும்மியாட்டம் ஆடி தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். தங்களுக்குப் பணி வழங்கிய அரசு அதிகாரிகளுக்கும், ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கும், தங்களுடன் பணியாற்றிய சக பணியாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
இதையும் படிங்க:வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோன்ற வீடியோக்களை பரப்பிய நபர் கைது!