''தூங்காதே தம்பி தூங்காதே'' - அவசரப் பிரிவில் தூங்கிக் கொண்டிருந்த மருத்துவர்!
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சுமார் 190 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு, தற்போது 5 தளங்களில் இயங்கி வருகிறது. இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளை கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, குழந்தைகள் சிறப்புப் பிரிவு உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் உறங்குவது போல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக காலை நேரத்தில் அதிகமாக வருவது வழக்கமாக உள்ள நிலையில் மருத்துவர்கள் மருத்துவமனைக்குள்ளேயே அலட்சியமாக உறங்குவது நோயாளிகள் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட செவிலியர் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படும் நிலையில் பணி சுமை காரணமாக உறங்கினார்களா?! அல்லது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியம் காரணமாக உறக்கம் ஏற்பட்டதா? என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக விசாரணை மேற்கொண்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருவள்ளூர் மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டம்!