தூத்துக்குடியில் மிகக் கனமழை: செக்காரக்குடி ஊராட்சியில் இணைப்பு சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.!
Published : Dec 17, 2023, 8:56 PM IST
தூத்துக்குடி:கனமழை காரணமாகத் தூத்துக்குடி செக்காரக்குடி ஊராட்சியில் இணைப்பு சாலை துண்டிக்கப்பட்டு தீவு போல் காட்சியளிக்கிறது.
ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செக்காரக்குடி ஊராட்சியின் தெற்கு பகுதியில் இரண்டு ஓடைகளும் கிழக்குப் பகுதியில் ஒரு ஓடையும் உள்ளது. இதில் தெற்கு பகுதியில் உள்ள இரண்டு ஓடைகளிலும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியானது கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
மேலும் செக்காரக்குடி ஊராட்சியின் கிழக்குப் பகுதியில் மகிளம்புரம் அருகே சிறிய தரைமட்ட பாலம் அமைந்துள்ளது. இந்த மூன்று பாலங்கள் அமைந்துள்ள சாலைகளின் வழியாக மட்டுமே செக்காரக்குடிக்கு பாதை அமைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு முதல் தற்போது வரை பெய்த கனமழை காரணமாக செக்காரக்குடி தெற்கு பகுதியில் உள்ள பாலம் அமைக்கும் பணி நடக்கும் இடத்தில் அதிக அளவில் வெள்ள நீர் வந்ததால் இணைப்பு சாலை அடித்துச் செல்லப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும், மகிழம்பூரம் தரைமட்ட பாலத்திலும் மிக அதிக அளவில் வெள்ள நீர் செல்வதால் தரைமட்ட பாலமும் சேதம் ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.