எங்க மலையை வெளியூர் மக்களுக்கு பட்டா போட்டு கொடுப்பதா? - ராணிப்பேட்டை மக்கள் திடீர் போராட்டம்!
ராணிப்பேட்டை:மலை புறம்போக்கு நிலத்தில் வெளியூர் மக்களுக்குப் பட்டா வழங்குவதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாலாப்பேட்டை அடுத்த கொண்டக்குப்பம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில், வனத்துறைக்கு அருகில் மலைப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் வெளியூர் பகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்குப் பட்டா வழங்க வருவாய்த் துறை அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளியூர் மக்களுக்குப் பட்டா வழங்கினால், அந்த பகுதியில் வசிக்கும் புகழேந்தி ஊர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் அந்த புறம்போக்கு நிலத்தில் தான், 100 நாள் வேலைக்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் செல்கின்றனர் எனவும் தெரிவித்தனர். இப்போது அந்த நிலம் வெளியூர் மக்களுக்கு வழங்கப்பட்டால், 100 நாள் வேலை செய்வோர் பக்கத்துக் கிராமமான லாலாப்பேட்டைக்கு செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், ஏற்கனவே அந்த கிராமத்தைச் சேர்ந்தோர், இவர்களை வேலைக்காக அந்த பகுதிக்கு வரக்கூடாது எனக் கூறியிருப்பதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். எனவே, இதனைக் கண்டித்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள், அந்த இடத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் அளித்த உத்தரவாதத்தின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:சென்னை ஐஐடியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை!