கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் 'பிளம்ஸ்' அழகிய காட்சி!
திண்டுக்கல்: கொடைக்கானல் மேல்மலையில் வனத்துறைக்குச் சொந்தமான குண்டாறு பல்லுயிர் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு ’பிளம்ஸ்’ மரங்களுக்கு அங்குள்ள பணியாளர்கள் கடந்த பத்து மாதங்களாகக் கோழிகளின் கழிவுகளைத் தொடர்ந்து உரமாக இட்டு வந்துள்ளனர். அதன் விளைவாக எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பிளம்ஸ் மரங்கள் முழுவதும் கொத்துக் கொத்தாக வெண்ணிற பூக்கள் பூத்துக் குலுங்கியுள்ளது.
மரம் முழுவதும் அடர்த்தியான பூக்கள் பூத்துள்ளது, அவ்வழியே செல்லும் சுற்றுலாப் பயணிகளையும், வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் இதே போல பிளம்ஸ் மரங்கள் வைத்திருப்பவர்கள் கோழி கழிவுகளை உரமாகப் போட்டு பிளம்ஸ் விளைச்சலைப் பெருக்க தோட்டக்கலைத்துறையினர் விவசாயிகளுக்கு அறிவுறுத்த முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இது குறித்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பெருமாள்சாமியிடம் கேட்ட போது, "குண்டாறு பகுதியை ஆய்வு செய்து கோழி கழிவுகளை எவ்வாறாகப் பயன்படுத்துவது என்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்படும்" என்று தெரிவித்தார். மேலும் அப்பகுதி வழியே செல்லும் சுற்றுலாப் பயணிகளும் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.