IT Raid: 3வது நாளாக அமைச்சர் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு! நாளையும் நீடிக்குமா?
கோயம்புத்தூர்: மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மே 26ஆம் தேதியிலிருந்து சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் இன்று (மே 28) 3-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர் அரவிந்த் என்பவர் வசிக்கும் பிரிக்கால் அடுக்குமாடி குடியிருப்பிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் 3-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சௌரிபாளையம் பகுதியில் உள்ள அரவிந்த் அலுவலகத்திலும் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. இதே போன்று, தொண்டாமுத்தூர் பகுதியில் அரவிந்தின் மனைவி காயத்ரி நடத்தி வரும் போதை மறுவாழ்வு மையத்திலும் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளிலும் வருமான வரித்துறை சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை நாளையும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.