புதிய நாடாளுமன்ற கட்டடத்தை அலங்கரிக்கும் செங்கோல் வடிவில் லட்டு!
சென்னை:டெல்லியில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா இன்று (மே 28) மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி அங்கு சபாநாயகர் அமரக்கூடிய இடத்தின் அருகே தமிழ்நாட்டின் ஆதினங்களால் வழங்கப்பட்ட செங்கோலை (Sengol) நிறுவி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தார். இதற்காக பல்வேறு விதமான சிறப்பு பூஜைகளும் ஹோமங்களும் நடத்தப்பட்டன.
இந்த பூஜைக்கு பின்னர், பல நூறு ஆண்டுகளாக தமிழ்நாட்டையும் தென்னிந்தியாவின் பல பகுதிகளையும் மிகப்பெரிய படைக்கொண்டு நல்லாட்சி செய்த சோழ மன்னர்களின் பொற்கால ஆட்சிக்கு சாட்சியாக திகழும் செங்கோலை பிரதமர் மோடி வணங்கினார். இதைத்தொடர்ந்து, ஆதீனங்களிடம் ஆசிர்வாதம் பெற்று நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர் இருக்கை அருகே பிரதமர் மோடி நிறுவினார். இத்தகைய சிறப்பு மிக்க தமிழர்களின் பாரம்பரிய செங்கோலை நாடாளுமன்ற வளாகத்தில் வைத்திருப்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.
எனவே, சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த பட்டாபிராம் பேருந்து நிலையம் அருகே 'விவேகா இந்து' இயக்கத்தின் மாநில தலைவர் இல.கணபதி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோலை நினைவாக வைத்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 51 கிலோ 501 லட்டுகளில், செங்கோல் போல் வடிவமைத்து, விவேகா இந்து இயக்கம் சார்பாக பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடினர். மேலும், இந்த நிகழ்ச்சியில், விவேகா இந்து இயக்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர்.. சபாநாயகர் இருக்கை அருகே தமிழ்நாட்டின் 'செங்கோல்'