சட்டைநாதர் கோயில் பரிவார சந்நிதிகளில் கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!
சீர்காழி:மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இக்கோயிலில் சட்டைநாதர் சுவாமி, திருநிலைநாயகி அம்மன் அருள்பாலிக்கின்றனர். இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் காட்சி தருகிறார்.
திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய தலமாக போற்றப்படும் இக்கோயிலில் கடந்த 32 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து இந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன் திருப்பணிகள் தொடங்கின. பணியின்போது குழி தோண்டப்பட்ட இடத்தில் 2 அடி ஆழத்தில் தமிழில் தேவாரப் பதிக செப்பேடுகள், கல்வெட்டுகள், கற்சிலைகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 32 ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலின் மேற்கு கோபுர வாசல் திறக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 16ம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 88 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, புனிதநீர் எடுத்து வரப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடந்தன. இந்நிலையில் இன்று (மே 22) காலை 9 மணிக்குத் தொடங்கி 10.30 மணிக்குள் பரிவார கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.
ஆபத்து காத்த விநாயகர், சம்கார வேலவர், அஷ்ட பைரவர், ருணம் தீர்த்த விநாயகர், காளிபுரீஸ்வரர், கணநாதர், மண்டபம் குமாரர்,தேவேந்திர லிங்கம் உள்ளிட்ட பரிவார கோயில்களில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இவ்விழாவில் தருமபுர ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பத பரமாச்சாரியர் சுவாமிகள், உயர் நீதிமன்ற நீதியரசர் மகாதேவன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.