"கூந்தல் தானம்": நெல்லையில் புற்றுநோயாளிகளுக்கு அரசு பெண் ஊழியர்கள் தானம்
திருநெல்வேலி: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி, "மகளிர் தினம்" கொண்டாடப்பட்டுகிறது. உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும், ஆண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் மகளிர் அனைவரும் ஒன்றிணைந்து சர்வதேச மகளிர் தினத்தை வெகு விமர்சியாக கொண்டாடினர். நாடகங்கள், ஆடல் பாடல் நிகழ்ச்சி, கோல போட்டி உள்ளிட்ட பல்வேறு கொண்டாட்டங்கள் இந்த நிகழ்ச்சிகளில் இடம் பெற்றது. இந்த கொண்டாட்டங்களுக்கு இடையே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல் படி சிறப்பு முன்னெடுப்பாக ஒரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளில் பணி செய்யும் பெண் அரசு ஊழியர்கள் புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தங்களது தலை முடிகளை தானமாக வழங்கினர். நெல்லை கேன்சர் இன்ஸ்டியூட் மற்றும் பெண் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் சுமார் 20க்கும் மேற்பட்ட பெண் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு ஒவ்வொருவரும் சுமார் 10 இன்ச் வரை தங்களது தலை முடிகளை அடையார் கேன்சர் சென்டருக்கு தானமாக வழங்கினர். அவர்கள் மூலம் தானமாக வழங்கப்பட்ட முடி அனைத்தும் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து விக் தயார் செய்யப்பட்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்படவுள்ளது.