கோயில் திருவிழாவில் விடிய விடிய அசைவ அன்னதானம்.. 2 லட்சம் பக்தர்கள் உணவருந்தி மகிழ்ச்சி!
திண்டுக்கல் மலைக்கோட்டையின் பின்புறமாக அமைந்துள்ள கிராமம் முத்தழகுப்பட்டி. இங்கு 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வருடந்தோறும் ஆடி மாதத்தில் மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும். அந்த வகையில் கடந்த ஜூலை 30- ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று (ஆகஸ்ட் 1) பல்வேறு பகுதிகளிலிருந்து வரக்கூடிய லட்சக்கணக்கான இறைமக்களுக்கு, விடிய விடிய அசைவ அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அதற்கு முன்னதாக அன்னதானத்திற்குத் தேவைப்படும் பொருட்களைப் பொதுமக்கள் காணிக்கையாக வழங்குவர். இந்தாண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 2000-க்கும் மேற்பட்ட கோழிகள், 500 கிலோ தக்காளி, ஆயிரம் கிலோ கத்திரிக்காய், 300 கிலோ இஞ்சி பூண்டு, 500 கிலோ சின்ன வெங்காயம், தேவைக்கேற்ப கிலோ கணக்கில் மசாலா பொருட்கள் காணிக்கையாக வழங்கப்பட்டது.
இந்த உணவு சமைக்கும் பணியில் ஊர் பொதுமக்கள், மகளிர் சங்கங்கள் என நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர். மேலும் ஆடு மற்றும் கோழிகளை ஒன்றாகச் சமைக்கக்கூடிய இந்த அசைவ அன்னதான விருந்தானது நேற்று இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான இறைமக்கள் வருகை புரிந்து, காத்திருந்து அன்னதானத்தில் பங்கேற்றனர்.
மேலும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான குழந்தைகள் ஏலத்தில் விடும் நிகழ்வானது நடைபெற்றது. குழந்தை வரம் வேண்டி நேர்த்திக்கடன் வைத்தவர்கள் குழந்தை பாக்கியம் பெற்ற பின் அந்த குழந்தையைக் கோயிலில் ஒப்படைத்து ஏலத்தில் விட்டு அக்குழந்தையை அவர்களே ஏலத்தில் எடுத்துச் செல்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த குழந்தைகள் ஏலத்தில் அதிகபட்சமாக 600 ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டது.