பரபரப்பான கள ஆய்வுக்கு மத்தியில் திடீரென சமூக சேவையில் ஈடுபட்ட CM - ஸ்பாட் தான் ஹைலைட்டே!
கடந்த 1971ஆம் ஆண்டு மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தான் முதலமைச்சராக இருந்தபோது, செங்கல்பட்டு பரனூரில் அரசு மறுவாழ்வு இல்லம் ஒன்றினைத் தொடங்கினார். இந்த மறுவாழ்வு மையத்தில் 100க்கும் மேற்பட்ட முதியோர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (ஏப்ரல் 26) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வுக்காக சென்றார். அப்போது திடீரென பரனூரில் உள்ள இந்த மறுவாழ்வு இல்லத்துக்கு முதலமைச்சர் சென்றுள்ளார். இதனையடுத்து மறுவாழ்வு இல்லத்தில் உள்ள 109 முதியவர்களுக்கு புடவை, லுங்கி, போர்வைகள் உள்பட நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அங்குள்ள முதியவர்கள் கூறுகையில், “கருணாநிதிக்குப் பிறகு, இந்த பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு எந்த முதலமைச்சரும் இதுவரை நேரில் வந்ததில்லை. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்துள்ளது மிக்க மகிழ்ச்சியைத் தந்துள்ளது. முதலமைச்சரிடம் பல கோரிக்கைகளை நாங்கள் முன் வைத்தோம். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்” எனத் தெரிவித்தனர்.