video:அசுர வேகத்தில் சரக்கு ஆட்டோ மீது மோதிய கார் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!
கோயம்புத்தூர்: கோவை துடியலூர் அருகே அதிவேகமாக வந்த ஷிப்ட் டிசையர் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மற்றும் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நடந்து சென்ற கட்டிட தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பாஸ்கர் சுவாமிதாஸ். இவர் கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாஸ்ட்டராக உள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் கோவை மேட்டுப்பாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது கார் துடியலூர் அடுத்துள்ள என்.ஜி.ஜி.ஓ காலனி கேட் அருகே கட்டுப்பாட்டை இழந்து அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவின் மீது மோதி சாலையில் தலை குப்புற கவிழ்ந்தது.
மேலும் அங்கு நடந்து சென்று கொண்டிருந்த நரசிம்நாயக்கன் பாளையத்தை சேர்த்த கட்டிட தொழிலாளியான 40 வயதுடைய சக்திவேல் மீதும் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் காரை ஓட்டி வந்த பாஸ்கர் சாமிதாஸ்க்கு வலது கை மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த துடியலூர் காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கார் விபத்து சம்பவம் அருகில் இருந்த பேக்கரி கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.