அழகான, ஆரோக்கியமான கூந்தல் வேண்டும் என்பது பலரது ஆசை. கூந்தல் இருந்தாலே அது நமக்குள் ஒரு தன்நம்பிக்கையும், உற்சாகமும் ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு பளபளப்பான கூந்தலைப் பெற ஏங்காத பெண்கள் இருக்கவே முடியாது . ஆனால் அதைப் பெற நம் அதிகம் செலவு செய்ய வேண்டியதாக இருக்கிறது. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி கூந்தலை வளர்க்கப் போராடுகிறோம். ஆனால் அது மட்டும் போதாது, நமது அன்றாட வாழ்க்கையில் சில விஷயங்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கூந்தலுக்காக நாம் தேர்வு செய்யும் ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறுகிறார் முடி ஆரோக்கியத்தில் நிபுணத்துவம் பெற்ற அழகியல் மருத்துவர் சாரு சிங்.
ஊட்டச்சத்து: அழகான கூந்தலில் ஆரம்பம் ஆரோக்கியமான உடலுடன் தொடர்புடையது என்கிறார் மருத்துவர் சாரு சிங். உணவுகளில் வைட்டமின், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புச் சத்துக்களைச் சரிவிகிதம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒமேகா கொழுப்பு நிறைந்த காள மீன் (salmon fish) வகை, கீரை, முட்டை, வெண்ணெய், நட்ஸ் உள்ளிட்ட உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் பெரிதும் உதவும். அதனுடன் நாள்தோறும் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது முடியின் ஈரப்பதத்தை உறுதி செய்யும்.
முடியின் சுத்திகரிப்பில் கவனம்:தலைகுளிக்கும்போது நாம் பயன்படுத்தும் ஷாம்பு மற்றும் கண்டிஷ்னர்கள் தேர்வு செய்வதில் பிரத்தியேகமான கவனம் செலுத்த வேண்டும். லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் வகைகளைத் தேர்வு செய்யுங்கள். இது உங்கள் கேசத்தில் உருவாகும் இயற்கையான எண்ணையை அகற்றாமல் பாதுகாக்கும், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும். மேலும், நீங்கள் தலையில் ஷாம்பு தேய்த்துக் குளிக்கும்போது உச்சம் தலையில் மென்மையாக தெய்த்துக்கொடுங்கள் இது உடலில் ரத்த ஓட்டத்தைத் தூண்டி ஆரோக்கியமான முடி வளர உதவி செய்யும்.
முடிக்கு வெப்பம் கொடுப்பதைத் தவிர்க்கவும்: அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலர் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக ஹேர் ஸ்ட்ரைட்டனிங், கர்லிங் அயர்ன்கள், ட்ரையர் உள்ளிட்ட சூடான கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். இதைக் குறைப்பது மிக அவசியமான ஒன்று. மேலும், அது தேவைப்படும் பட்சத்தில் ஸ்டைலிங் செய்வதற்கு முன்பு வெப்பப் பாதுகாப்பு ஸ்ப்ரேவை பயன்படுத்துங்கள். முடிந்தவரை இயற்கையான சிகை அலங்காரம் மேற்கொண்டு முடிக்கு வெப்பத்திலிருந்து விடுதலை கொடுங்கள்.
புற ஊதா கதிர்களால் முடிக்குப் பாதிப்பு:நம் சருமத்தைப் போலவே, தலைமுடியும் சூரிய ஒளியால் பாதிக்கப்படலாம். புற ஊதா கதிர்கள் முடியில் அதிகம் படும்போது முடியின் நிறம் மங்கிப்போக வாய்ப்பு இருக்கிறது. இதனால் வெளியில் செல்லும்போதோ அல்லது வேலை செய்யும்போதோ முடியைப் பாதுகாக்கும் வகையில் தொப்பி அணியுங்கள். அல்லது யூவி ஹேர் ஸ்ப்ரேவை பயன்படுத்துங்கள்.