டெல்லி:தற்போதைய காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் ஜங்க் ஃபுட்ஸ்(Junk Foods)-ன் ஆதிக்கம்தான். உடல் உழைப்பு குறைந்து பல்வேறு நோய்கள் வந்தபோதும், அதிகளவு சர்க்கரையும், கொழுப்பும் நிறைந்த ஜங்க் ஃபுட்ஸை நம்மால் தவிர்க்க முடியாத சூழலே இருக்கிறது. அதேநேரம், சிலர் இந்த ஜங்க் ஃபுட்ஸை தவிர்த்துவிட்டு, உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ளவும் முயற்சி செய்கிறார்கள். ஆனால், அவர்கள் தங்களுக்கு விருப்பமான சில உணவுகளை தவிர்க்கிறார்கள். அதேபோல் டயட் என்ற பெயரில் சுவையில்லாத உணவுகளை சாப்பிட வேண்டியுள்ளது.
இது போன்ற சூழ்நிலையில், ஜங்க் ஃபுட்ஸ்-க்கு மாற்றாக, உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் சுவையான மற்றும் புதுமையான உணவுகள் கிடைத்தால் எப்படி இருக்கும்? - ஆம், சூப்பர் ஃபுட்ஸ்(Super foods) மூலம் நம் அன்றாட உணவுகளை சத்தானதாகவும், சுவாரசியமாகவும் மாற்றலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சிறுதானியங்கள், சியா விதைகள் போன்ற சூப்பர் ஃபுட்ஸ் நமது உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்றும் என்றும் கூறுகிறார்கள். தினசரி உணவுகளை சூப்பர் ஃபுட்ஸ் மூலம் ஆரோக்கியமானதாகவும், சுவையானதாகவும் மாற்றும் சில வழிகளைப் பார்க்கலாம்...
டைஜெஸ்டிவ் ரொட்டி(Digestive Rotis): இந்தியாவில் பிரதானமான உணவுகளில் ஒன்றான சப்பாத்தி அல்லது ரொட்டி ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்களும் இதை உண்பார்கள். இந்த ரொட்டிகளை சமைக்கும்போது, வழக்கமான கோதுமை மாவுக்கு பதிலாக ராகி, தினை உள்ளிட்ட சிறுதானிய மாவுகளைப் பயன்படுத்தலாம். இது குடலின் ஆரோக்கியத்தையும், செரிமானத்தையும் மேம்படுத்தும்.
ஸ்பெஷல் சிச்சடி: நம் அன்றாட உணவுகளில் ஒன்றான கிச்சடி, சத்தான காய்கறிகள் சேர்த்து சமைக்கப்படுகிறது. இதனை மேம்படுத்த, தண்டுக்கீரை விதைகள்(Amaranth seeds), குயினோவா(Quinoa) போன்ற சூப்பர் ஃபுட்ஸை சேர்த்து சமைக்கலாம். இது முழுமையான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவாக இருக்கும்.