ஹைதராபாத்:அழகு என்பது ஒவ்வொருவரின் ஆசை. அழகாக இருக்க ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்யும் மக்கள் இந்திய நாட்டின் பாரம்பரிய முறைகளை மறுப்பதும், மறப்பதும் கவலைக்குரியது எனக்கூறுகிறார் அரோமாதெரபிஸ்ட் மற்றும் அழகுக்கலை நிபுணரான பூஜா நாக்தேவ். மேலும், கடலை மாவு, மஞ்சள், தயிர் இவற்றின் கலவை தோல் பராமரிப்பில் இன்றியமையாத ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார்.
மஞ்சள்: மஞ்சள் சிறந்த ஒரு ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் உள்ள முதன்மை பண்பு மிக்க குர்குமின் என்ற வேதிப்பொருள் தோலில் உள்ள இறந்த செல்களை அகற்றி வயதான தோற்றத்தைக் குறைக்க உதவும். மஞ்சள் இயற்கையிலேயே நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட பண்புகளுடன் உள்ளதால் தோல் தொடர்பான பிரச்சனைகளுக்குச் சிறந்த தீர்வாக அமையும். மேலும் சருமத்தைச் சீராகப் பேணி பாதுகாக்கும். அது மட்டும் இன்றி ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். மேலும், காற்றில் உள்ள மாசுபாடு காரணமாகவோ அல்லது உடல் சூடு காரணமாகவோ ஏற்படும் முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்த உதவும்.
கடலை மாவு:கடலை மாவு சற்று தரிதரியான பண்போடு இருக்கும். இதனுடன் மஞ்சள் மற்றும் தயிர் கலந்து மென்மையாகச் சருமத்தில் தேய்க்கும்போது தோலில் உள்ள இறந்த செல்களை அது அகற்றி துவாரங்களைச் சுத்தம் செய்து பொலிவை ஊக்குவிக்கும். மேலும், இளம் பெண்களின் மிகப்பெரிய பிரச்சனை ஆயில் ஸ்கின் என்பதுதான். இதனால் அவர்கள் முகப்பரு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். கடலை மாவு ஒரு சிறந்த எண்ணை உறிஞ்சி. இதை முகத்தில் வழக்கமாக தேய்த்து வரும்போது எண்ணை உறிஞ்சப்பட்டுத் தெளிவான முகப்பொலிவு கிடைக்கும். முகப்பருக்களிலிருந்து விடுதலை கிடைக்கும்.