தூக்கத்தில் குறட்டை விடுவது என்பது, நம்மில் பலருக்கும்சர்வ சாதாரணமாகிப்போன விஷயம். எனினும், இதனால் பலருக்கு தூக்கம் கெடுவது, உடல் ஆரோக்கியக் கேடு உள்ளிட்ட பல முக்கியப் பிரச்னைகள் எழுகின்றன.
அதிக சத்தமாக குறட்டை விடுவது ஸ்லீப் அப்னியா எனப்படும் தூக்க கோளாறுக்கு நம்மை இட்டுச் செல்லும். இந்தக் கோளாறு ஏற்பட்டால் மூச்சு விடும்போது சுவாசம் தடைப்பட்டு மீண்டும் தொடங்கும். இது மிகவும் ஆபத்தான உறக்கக் கோளாறு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
குறட்டையை முடிந்த அளவிற்கு குறைக்க சமீபத்தில் ஆய்வுகளை நடத்தியுள்ள ஆராய்ச்சியாளர்கள், குறட்டை விடுவதை எளிய முறையில் குறைக்கும் வழிகளையும் தெரிவித்துள்ளனர்.
இந்த எளிய வழியைப் பின்பற்றுங்கள்!
குறட்டையை குறைக்க எளிய வழி ஒன்றை நேஷனல் சென்டர் ஃபார் பயோடெக்னாலஜி இன்பர்மேஷன் (National Center for Biotechnology Information) கண்டறிந்துள்ளது. ஒரு நாளைக்கு அதிக நேரம் நிற்கும்போது, உட்காரும்போது கால்களை நகர்த்திக்கொண்டே இருப்பதன் மூலம் இரவில் குறட்டை விடுவது குறைகிறதாம்.
அது எப்படி என்று கேட்கிறீர்களா? பதில் வைத்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆய்வை நடத்த, தூங்கும்போது குறட்டை விடும் சுமார் 16 பேரை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு செய்துள்ளனர். அவர்களின் கால்களில் பின் பகுதியில் இருக்கும் திரவத்தின் அளவை குறித்து வைத்துள்ளனர்.
பின்பு அனைவரையும் நான்கு மணி நேரத்திற்கு உட்கார வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இரவில் அவர்களின் குறட்டைவிடும் நேரம் குறைந்துள்ளது. இரண்டாவதாக, பாதி பேரை தரையில் கால்களை அழுத்தமாக வைக்க அறிவுறுத்தியுள்ளனர். மீதி பாதி பேர் சாதாரணமாக அமர வைக்கப்பட்டனர். ஒரு வாரம் கழித்து மீண்டும் முதல் குழுவை சாதாரணமாக அமர வைத்துவிட்டு, இரண்டாவது குழுவினரை கால்களை தரையில் அழுத்தமாக வைக்கச் சொல்லியிருக்கின்றனர்.