லண்டன்: வார இறுதி நாட்களில் காலம் தாழ்த்தி தூங்குவது, வார நாட்களில் சீக்கிரமாக எழுவது உள்ளிட்ட ஒழுங்கற்ற வாழ்வியல் முறையால் உடலில் உள்ள உயிரியல் கடிகாரத்தில் (Biological Clock) மாற்றம் ஏற்பட்டு குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாவதை ஊக்குவிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உடலில் உள்ள சர்க்காடியன் தாளங்கள் மற்றும் குடல் நுண்ணுயிரிகள் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வில் பல நம்ப முடியாத அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகி இருக்கிறது. நம் அன்றாட வாழ்கையில் மிகச் சாதாரணமாக நினைக்கும் தூக்க நேரம் தொடர்பான அளவீடுகளில், சிறிய மாற்றம் கூட பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் மிகக் குறைவாக இருக்கிறது எனத் தெரிவிக்கும் ஆய்வாளர்கள், முறையற்ற தூக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்குகின்றனர்.
அந்த வகையில், தூக்கத்தின் நடுப்புள்ளியின் நேரத்தின் 90 நிமிட வித்தியாசம் மற்றும் தூங்கும் நேரத்திற்கும் எழுந்திருக்கும் நேரத்திற்கும் இடையிலான அரைப் புள்ளியில் ஏற்படும் வித்தியாசம் குடல் நுண்ணுயிரியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி, நாளடைவில் பல உடல் நல உபாதைகளுக்குக் காரணம் ஆகும் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் எனக்கூறும் ஆய்வாளர்கள், கூடவே, இதய பிரச்னை, நீரிழிவு நோய் உள்ளிட்டப் பல உடல் உபாதைகளுக்குக் காரணமாக அமையும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களுக்கான முதல் காரணம் தூக்கம் இன்மை, முறையற்ற தூக்கம் உள்ளிட்டவைதான் எனவும் ஆய்வாளர்களின் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.