ஆஸ்துமா நோயாளிகள் மருந்துகள் உட்கொள்வதைத் தாண்டி உணவே மருந்துதான் என ஆய்வாளர் இவான் வில்லியம்ஸ் கூறியுள்ளார். தங்கள் அன்றாட வாழ்கையில் சில உணவு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஆஸ்துமா நோயின் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆஸ்துமா நோய்: தொற்று நோய் உள்ளிட்ட சில நீண்டகால ஒவ்வாமையால் நுரையீரல் மற்றும் சுவாசக்குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு இளைப்பு (மூச்சுத் திணறல்) நோயே ஆஸ்துமா எனப்படுகிறது. இந்த ஆஸ்துமா நோய் உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய மற்றும் நடுத்தர நாடுகளைச் சேர்ந்த மக்களே அதிகம் உயிரிழப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலுடன் உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் உணவு முறையில், சில கட்டுப்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் அதைக் கட்டுப்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது.
காய்கறிகள், பழங்கள்:ஆஸ்துமா நோயாளிகள் காய்கறி மற்றும் பழங்களை உட்கொள்ளலாம் எனவும்; இதனால் ஆஸ்துமா நோயின் தாக்கம் இருக்காது எனவும் கூறப்படுகிறது. அதே நேரம் சில காய்கறிகள் அவர்களுக்கு ஒவ்வாமையை (Allergy) ஏற்படுத்தலாம். அந்த காய்கறியை கண்டறிந்து அதை மட்டும் தவிர்க்க வேண்டும்.
மேலும் காய்கறி மற்றும் பழங்கள் ஆக்ஸிஜனேற்றிகளாகவும், நார்ச்சத்துடையவைகளாகவும் இருப்பதால் இவரை அழற்சிக்கு எதிராக போராடவைக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஒமேகா-3 உணவு வகைகள்;காலா மீன் (salmon fish), ஆளிவிதை, சியா விதைகள் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்ற ஒமேகா-3 அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது ஆஸ்துமா நோயாளிகளுக்கு எவ்வித தீங்கையும் விளைவிக்காது. மேலும் இது இதய நோய் அபாயத்தையும் குறைக்கும்.
செறிவூட்டப்பட்ட கொழுப்பு நிறைந்த உணவுகள்;குறைந்த வெப்ப நிலையில் திடமாக மாறும் பாம் ஆயில், தேங்காய் எண்ணெய், இறைச்சி, வெண்ணெய் போன்ற அனைத்திலும் ஆரோக்கியம் அற்ற கொழுப்புகள் உள்ளன. இதை ஆஸ்துமா நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
இந்த செறிவூட்டப்பட்ட கொழுப்பு நிறைந்த எந்த உணவை அவர்கள் உட்கொண்டாலும் அடுத்த நான்கு மணி நேரத்தில் அவர்களின் நுரையீரல் அதற்குண்டான பாதிப்பை எதிர்கொள்ளும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பால் மற்றும் பால் பொருட்கள்;பால் மற்றும் பால் பொருட்களை ஆஸ்துமா நோயாளிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றே பல மருத்துவ ஆய்வுகள் கூறியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை இயற்கை மருத்துவர்களும் ஆங்கில மருத்துவர்களும் இந்த கருத்தைத் தான் முன்வைக்கின்றனர்.
ஆனால், இது குறித்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஸ்துமா நோயாளிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் பால் மற்றும் பால் பொருட்களை ஆஸ்துமா நோயாளிகள் உட்கொள்வதால் எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும்; மாறாக அவர்களின் நுரையீரல் சிறந்த முறையில் செயலாற்ற அது துணை புரிகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாடுகளுக்கு இடையே உள்ள காலநிலையை பொறுத்து மாறுபடலாம் என்பது மருத்துவர்களின் கருத்து ஆகும்.
இதையும் படிங்க:ஆரோக்கியமான, அழகான நீண்ட கூந்தல் வேண்டுமா.? நிபுணர்கள் கூறுவது என்ன?