இந்தத் தொற்று காலம் நம்மில் பலரது வாழ்க்கையையும் வாழ்க்கை முறையையும் மாற்றியிருக்கிறது. நம்மில் சிலருக்கு இந்த ஊரடங்கு நல்லவற்றை செய்திருக்கிறது. எனினும் வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் இளைஞர்கள், ஆன்லைன் வகுப்புகளால் வாடிப் போயிருக்கும் குழந்தைகள், மாணவர்கள், வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் ஆகியோரை இந்த ஊரடங்கு காலம் கொஞ்சம் மன அழுத்தத்தில் தள்ளியிருக்கிறது என்று அறுதியிட்டு சொல்லலாம்.
மேலும், இது போன்ற சமயங்களில் மன அழுத்தம் என்பது அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாத ஒன்று. மன அழுத்தம் ஏற்படும் பெரும்பாலானவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயங்களும் அதிகம். காரணம் மன அழுத்தம், உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எனவே உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் மனதில் வைத்து ஆரோக்கியமான உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க... அற்புதமான ஆற்றல் அளிக்கும் 9 உணவுகள்!
அண்மைக் காலமாக மக்கள் துரித உணவுகளை உட்கொள்வதை சற்று ஓரம் கட்டிவிட்டு, உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் குறித்து இணையத்தில் தேடி ஆராய்ந்து உண்டு, தங்கள் உணவு முறையை மேம்படுத்தி வருகின்றனர். இதற்கு கரோனா நோய்த் தொற்றும் ஒரு காரணம். உணவிலுள்ள ஊட்டச்சத்துகள் குறித்து ஆராய்ந்து உணவுகளை எடுத்துக் கொண்டாலும், ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்வதின் அடிப்படையை நாம் தெரிந்துகொண்டு, அதன் பிறகு அவற்றை உட்கொள்ளலாம். உணவு உட்கொள்வதில் சில பழக்க வழக்கங்களை மாற்றியமைத்தால் போதும், மன அழுத்தம் இல்லாமல் இந்த ஊரடங்கை நிம்மதியாகக் கடக்கலாம்.
வீட்டில் தயாரிக்கும் உணவிற்கே முன்னுரிமை கொடுங்கள்:
தொற்று காலத்திற்கு முன்பு வெளியில் உணவு உட்கொண்டிருந்த நம்மில் பலருக்கு வீட்டு உணவு குறித்தான புரிதல் அதிகரித்திருக்கும். உடல் ஆரோக்கியத்தை நாம் எந்த அளவிற்கு முன்பு அசட்டை செய்திருப்போம் என்றும் உணர்ந்திருப்போம்.
இந்த நேரத்தில், சரியான உணவைத் தேர்வு செய்து உண்பதற்கு நாம் கற்றுக் கொண்டிருப்போம். அதில் முக்கியமாக நாம் கருத்தில் கொள்ள வேண்டியது, வீட்டில் தயாரித்த உணவிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே. பிரிசர்வேட்டிவ் இல்லாத, சுவை கூட்டும் உப்புகள் இல்லாத உணவுகள், வீட்டில்தான் கிடைக்கும். அதற்கு நிகரான பாதுகாப்பான உணவு வேறு எங்கும் கிடைக்காது. வீட்டில் பிரெஷ்ஷாக வாங்கி வந்த எண்ணெயைப் பயன்படுத்துங்கள். சூடான உணவை சாப்பிடவே முன்னுரிமை கொடுங்கள்.
என்ன உணவினை எடுத்துக் கொள்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!