ஹைதராபாத்: நம் உடல் ஆரோக்கியத்தில், பால் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு பிறந்த குழந்தைக்கு முதலில் புகட்டுவது பால் தான். அந்தக் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் பால் பெரிதும் உதவுகிறது. பாலில் அதிகளவு விட்டமின் டி மற்றும் கால்சியம் இருப்பதால், எலும்பை வலுவாக்குவதற்கு உதவுகிறது. அதனால் தான் வளரும் குழந்தைகளுக்கு தினமும் 1 டம்ளர் பால் கொடுக்க வேண்டும் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுவர்.
இரவு தூங்க செல்வதற்கு முன்பு பால் பருகுதல் நல்லதா?: பசும் பாலில் அதிகளவு புரதம், கால்சியம், விட்டமின் பி மற்றும் விட்டமின் டி உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. பசும் பாலை பருகுவதால் இயற்கையிலேயே நமக்கு, நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். மனிதர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விஷயங்களை பின்பற்றி வருவர். அந்த வகையில் சிலர், இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பால் பருகுவர். அவ்வாறு இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பால் பருகுவது நல்லப் பழக்கம் தானா என்பது குறித்து மருத்துவர்கள் கூறுவதை பார்க்கலாமா..
செரிமான கோளாறை ஏற்படுத்துமா?:பாலில் கால்சியம் மட்டுமின்றி லாக்டோஸ் எனப்படும் இரட்டை சர்க்கரை உள்ளதால் தூக்கத்தை தடுக்கும். இதனால் இரவில் பால் பருகும் போது நமக்கு தூக்கம் வராது. இரவில் உடலின் செயல்பாடு வெகுவாகக் குறைந்திருப்பதால் தான் இரவு உணவு செரிமானம் ஆகாமல், செரிமான கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். அதனால் தான் இரவு உணவை, ஒரு பிச்சைக்காரன் போல் உண்ண வேண்டும் என்று கூறுவர். பால் பருகுவதால் செரிமான கோளாறை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.