விருதுநகர்:விருதுநகரில் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 34ஆவது நினைவு நாளையொட்டி ஐந்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜனவரி 3) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு அன்னதான நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், "திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய 300 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகக் கூறிவருகின்றனர். அவர்கள் நிறைவேற்றிய வாக்குறுதி குறித்து அறிக்கை வெளியிட வேண்டும். குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து எந்தவித அறிகுறியும் தெரியவில்லை.
3இல் ஒரு பங்கு நகைக்கடன் மட்டுமே தள்ளுபடி
நகைக்கடன் தள்ளுபடியில் பெரிய அளவில் குளறுபடி உள்ளது. மூன்றில் ஒரு பங்கு நகைக்கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படவில்லை. இவற்றை நிறைவேற்றாத திமுக அரசுக்கு வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள்" என்றார்.
விருதுநகரில் மாஃபா பாண்டியராஜன் பேட்டி தொடர்ந்து பேசிய அவர், "திமுக அரசு பொறுப்பேற்ற இந்த எட்டு மாத காலத்தில் சிறு, குறு தொழில்களை நசுக்கி அவர்களை நடுத்தெருவில் போராட்டத்திற்குத் தள்ளியது. ஆட்சியில் இருந்தபோது அதிமுகவை மத்திய அரசின் அடிமை அரசு எனக் கூறிய திமுக, எந்த மோடிக்கு Go Back Modi எனக் கூறினார்களோ, அவரையே இப்போது திமுகவினர் தலைகுனிந்து வரவேற்க உள்ளனர்.
மோடியின் பயணம் அதிமுக சாதனைகளை வெளிகாட்டும்
மோடியின் தமிழ்நாட்டுப் பயணம் அதிமுக அரசின் சாதனைகளை மீண்டும் அடிக்கோடிட்டு காட்டும். அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத் தங்கள் திட்டம் என திமுக கூறிவருகிறது. அந்தத் திட்டத்தில் தவறு நடந்தால் அதிமுக காரணம் எனவும், நல்லது நடந்தால் திமுக காரணம் எனக் கூறுவது திமுகவின் போலித்தனத்தின் உச்சம்.
அலுவலகத்தில் அமர்ந்து அலுவலர்களைப் பணி செய்யவைப்பதுதான் ஆளுமைக்கு அர்த்தம். தற்போது ஸ்டாலின் மட்டுமே வேலைசெய்கிறார். அலுவலர்களை வேலைசெய்ய வைக்கவில்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக அரசு வாக்குறுதியின்படி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்! - அண்ணாமலை