விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள டவுன் பகுதியில் மூன்று தலைமுறைகளாக 50 குடும்பத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின பிரிவைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
பிரதான தொழிலாக வேட்டையாடுதல், தேன் எடுத்தல், தூய்மை தொழில் போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். இவர்களுடைய பள்ளி மாற்றுச் சான்றிதழில் மட்டுமே சாதி குறிப்பிடப்பட்டுள்ளது.
வேறு எந்த ஆவணமும் இவர்களிடமில்லாத நிலையில் பள்ளி கல்வி முடிந்து கல்லூரி பயில சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் இந்தச் சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால் மூன்று தலைமுறைகளாக கல்லூரிப் படிப்பு பயில முடியாத சூழல் நிலவி வருவதாகவும், பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கூலி வேலைக்குச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
அரசு வேலைக்குச் செல்ல கல்லூரி மேற்படிப்புக்குச் செல்ல சாதி சான்றிதழ் கட்டாயம் தேவைப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து கல்வி பயில வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கின்றனர்.