விருதுநகர் ஆர்.ஆர். நகர் அருகே திமுக சார்பில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்னும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்தவர்களுக்கு திமுக சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் கரோனா காலகட்டத்தில் மக்களுக்குப் பயன்படும் வகையில் தானியங்கி கிருமிநாசினி கருவி கண்டுபிடித்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் மூவருக்கு மு.க. ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி பாராட்டுத் தெரிவித்தார்.
மேலும் தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற பரளச்சியைச் சேர்ந்த சிவசங்கர் என்ற ஆசிரியருக்கும், நாசா விண்வெளி அமைப்பு நடத்திய தேர்வில் வெற்றிபெற்று நாசாவுக்குச் செல்லவுள்ள மாணவிகளுக்கும் ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.
பின்னர் பேசிய ஸ்டாலின், “பெண்கள் முன்னேற்றத்திற்காக முதன்முதலாக மகளிர் சுய உதவிக்குழு ஆரம்பித்துவைத்து, அவர்களுக்கு நிதி உதவி அளித்தது திமுக ஆட்சிதான். அதிமுக அரசு கடைசி நேர கொள்ளையில் தற்போது இறங்கிவிட்டது. மக்களுக்கு ஏதாவது நல்லது செய்துவிடுவோம் என்று எண்ணாமல் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளது.
ஏன் அவசர அவசரமாக டெண்டர் என்று பார்த்தால் அரசுப் பணத்தை சுருட்டத்தான் இந்த டெண்டர். ஐந்து லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழ்நாடு உள்ளது. கடன் வாங்கி கொள்ளை அடிக்கும் நிலையில் பழனிசாமி அரசு இறங்கியுள்ளது.
இவை அனைத்தும் வேண்டியவர்களுக்கு கிடைக்கும் அளவிற்கு அவர்களே தயார்செய்கிறார்கள். முதியோர் ஓய்வூதியம், நிவர் புயல் போன்றவற்றிக்குப் பணம் ஒதுக்கச் சொன்னால் பணம் இல்லை என்று சொல்லும் அரசிடம், டெண்டர்விட மட்டும் பணம் அதிகமாக உள்ளது. இந்த அரசு மக்களுக்கான அரசு இல்லை; டெண்டருக்கான அரசு.
விருதுநகர் மாவட்டம் கல்விக்குப் பெயர்பெற்றது. இம்மாவட்டத்திற்கு களங்கம் விளைவிக்கும்வகையில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. இதுவரை தேர்தலில் வெற்றிபெற்றவர்களில் அடிமுட்டாளாக இருக்கிறார். இம்மாவட்டத்தில் அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு இருக்கின்றது.
இது குறித்து மதுரையைச் சேர்ந்த தல்லாகுளம் மகேந்திரன் வழக்குத் தொடர்ந்தார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என்பதைவிட மக்கள் தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஊரை அடித்து உலையில்போட்ட அதிமுக அமைச்சர்களைச் சிறைக்கு அனுப்பவும், மக்களுக்காக உழைக்கும் திமுகவை கோட்டைக்கு அனுப்பவும் மக்கள் முடிவெடுத்துவிட்டனர்.
திமுகதான் வெற்றிபெறுமென மக்கள் முடிவு பண்ணிட்டாங்க மேலும் அதிமுகவிற்கு திமுகதான் கொள்கை ரீதியான எதிரி. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் 80 கோடி ரூபாயில் கட்டுங்கள்; இது குறித்து கருத்து கூற விரும்பவில்லை, ஆனால் ஒரு முதலமைச்சரின் மரணம் மறைக்கப்படலாமா, உங்களுக்கு அவர் அம்மா என்றால் எங்களுக்கு முதலமைச்சர். எனவே ஒரு முதலமைச்சர் மறைவை மறைக்கலாமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் பேசுவதை ஒரு பொருட்டாகக் கருத வேண்டாம் - செல்லூர் ராஜு