விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கோட்டைப்பட்டியை சேர்ந்த கண்ணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், 'நான் வத்திராயிருப்பு ஒன்றிய 4வது வார்டு தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். எனது கட்சியின் சார்பில் ஏழு பேர் வெற்றி பெற்றிருந்தனர்.
இதைத்தொடர்ந்து நான், கடந்த 11.01.2020 அன்று நடந்த வத்திராயிருப்பு ஒன்றியத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டேன். எனக்கு எதிராக அதிமுகவைச் சேர்ந்த சிந்து முருகன் என்பவரும் போட்டியிட்டார். எனக்கு 7 வாக்குகளும், சிந்து முருகனுக்கு 6 வாக்குகளும் கிடைத்தன.
தேர்தல் அலுவலகத்தை சூறையாடிய அதிமுகவினர் - விருதுநகர் எஸ்பி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
மதுரை: வத்திராயிருப்பு யூனியன் தலைவர் தேர்தலின் போது அலுவலகத்தை சூறையாடிய ஆளுங்கட்சியினரை கைது செய்யக் கோரிய வழக்கில், விருதுநகர் மாவட்ட எஸ்.பி. பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தேர்தல் அலுவலர் அறிவித்தார். ஆனால் அதிமுகவினர் தங்கள் கட்சியை சேர்ந்த சிந்து முருகனைத்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில் அலுவலகத்திற்குள்ளேயே, தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்தனர்.
ஆனால், இதனை தேர்தல் அலுவலர் ஏற்க மறுத்தார். அப்போது அங்கு காவல் பணியில் இருந்த திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி தேர்தல் நடந்த அலுவலகத்தை திறந்துவிட்டு அதிமுகவினருக்கு சாதகமாக செயல்பட்டார். இதனைப் பயன்படுத்தி அலுவலகத்துக்குள் நுழைந்த ஆளுங்கட்சியினரும், சிந்து முருகன் தலைமையிலான கும்பலும், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதில் ரூ.2 லட்சத்துக்கும் அதிக மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. மேலும், நான் வெற்றி பெற்றதை அறிவிக்க விடாமலும் செய்துவிட்டனர்.
அலுவலர்களை மிரட்டி, அலுவலக பொருட்களைச் சேதப்படுத்திய சிந்து முருகன் மற்றும் கும்பல் மீது காவல் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், உயிரைக் கொடுத்தாவது நான்(கண்ணன்) யூனியன் தலைவராவதை தடுப்போம் எனக் கூறிவருகின்றனர். எனவே அடுத்துவரும் தேர்தலில் உரிய பாதுகாப்பு கொடுப்பதோடு, யூனியன் தாலுகா அலுவலகம் தாக்குதல் சம்பவம் பற்றி சிபிசிஐடி காவல்துறையினர் விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, விருதுநகர் மாவட்ட எஸ்பி இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டதுடன், விசாரணையை வரும் பிப்ரவரி 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.