சமீப காலமாக டிக் டாக் வீடியோக்களால் சமூக சீரழிவு ஏற்பட்டு வருகிறது. இளைய தலைமுறையினர் வீடியோ என்ற பெயரில் கண்டதையும் பதிவிட்டு பிறர் மனம் புண்படும்படியான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் டிக் -டாக் வீடியோ குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'சாதி மற்றும் மத ரீதியாக பிற சமூகத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் அவதூறாக பேசி அதை டிக்-டாக் செயலியின் மூலம் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
டிக் டாக் செயலியில் தவறாகப் பதிவிட்டால் தண்டனை - விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை
விழுப்புரம்: சமூக வலைதளங்களை தவறான நோக்கத்தில் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, பொதுமக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்புகளை ஜனநாயக ரீதியாக மட்டுமே வெளிப்படுத்த வேண்டுமே தவிர, இதுபோன்று பிறரது சாதியையும், மதத்தையும் விமர்சித்து வன்முறையை தூண்டும் விதத்தில், தேசிய மற்றும் மாநில கட்சி தலைவர்களை விமர்சனம் செய்து வீடியோ பதிவிடுவது மற்றும் மனதை புண்படுத்தும் வசனங்களை பதிவிடுவது ஆகியவை கூடாது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சமூக வலைதளங்களை நல்ல நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தவும், கருத்துக்களை பதிவிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எக்காரணத்தைக் கொண்டும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் இரு சமூகத்தினர் இடையே பிரச்னை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் விழுப்புரம் எஸ்பி எச்சரித்துள்ளார்.