தமிழ்நாடு

tamil nadu

வாக்காளர் செயலி மூலம் திருத்தங்களை மேற்கொள்ள விழுப்புரம் ஆட்சியர் அறிவுரை!

By

Published : Sep 4, 2019, 2:44 PM IST

விழுப்புரம்: ஓட்டர்ஸ் ஹெல்ப் லைன் என்ற செயலி மூலம் வாக்காளர்கள் தங்களது பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்டவைகளை திருத்திக் கொள்ளுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் கேட்டுகொண்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன்

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான வாக்காளர் சரிபார்ப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் சேவை மையத்தை ஆட்சியர் திறந்துவைத்தார். பின் செய்தியாளரிடம் பேசிய அவர்,

"வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை வாக்காளர்களே நேரடியாக திருத்தும் வகையில் தேர்தல் ஆணையம் ஓட்டர்ஸ் ஹெல்ப் லைன் (VOTERS HELP LINE) என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாக்காளர்கள் தங்களது பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்டவைகளை திருத்திக் கொள்ளலாம்.

மேலும், வாக்காளர்களின் பிறந்த தேதி, உறவு முறை, பாலினம் ஆகியவைகளை சரியாக இருப்பதை உறுதி செய்யலாம், அப்படியின்றி தேசிய வாக்காளர் சேவை மையம் என்ற NVSP இணையதள வசதி மூலமாகவும் அல்லது இ-சேவை மையம் மூலம் திருத்திக் கொள்ளலாம்.

மேலும், 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம். தொடர்ந்து மாத கால மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் முறையாக ஆய்வு செய்யப்பட்டு, அடுத்த மாதம் 30ஆம் தேதி சுருக்க முறை திருத்தப் பட்டியல் வெளியிடப்படும்.

மேலும் நவம்பர் மாதம் 2, 3, 9, 10 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்தக் காலங்களில் மக்கள் பயன்படுத்திக் கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் அவர்களை சரி செய்து கொள்ளலாம். எவ்வித தவறும் இல்லாத வகையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு அரசியல் கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர், தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான பிறகு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த பணிகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details