தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“தக்காளி விலை குறித்து மோடி கிட்ட போய் கேளுங்க” - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி!

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரிக்கை விடுத்த பெண்ணிடம், இதை ‘மோடி கிட்ட போய் கேளுங்க’ என உயர் கல்வித்துறை அமைச்சர் கூறியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Ask Modi to control tomato prices Minister Ponmudi speech again create controversy in viluppuram
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி

By

Published : Jul 27, 2023, 7:57 AM IST

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி

விழுப்புரம்:மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பான முகாமில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டபோது, தக்காளி விலை உயர்வு குறித்து கூட்டத்தில் அங்கிருந்து கேள்வி கேட்ட பெண்ணிடம், மோடியிடம் போய் கேளுங்கள்!, நாங்கள் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோமே அது மகிழ்ச்சி இல்லையா என தெரிவித்தது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜூலை 26) நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கும் முகாம்களை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். அப்போது அரகண்டநல்லூர் பேரூராட்சியில் நடைபெற்ற முகாமினை பார்வையிட்ட அமைச்சர் பொன்முடி, அங்கு இருந்த பொதுமக்களிடம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் அனைவருடைய கைகளிலும் வழங்கப்பட்டதா? உங்களுக்கெல்லாம் எவ்வளவு பணம் அரசின் சார்பாக வழங்க உள்ளது தெரியுமா, உங்களுக்கெல்லாம் வீடு, கார் இதுபோன்று ஏதேனும் இருக்கிறதா என்பது போன்ற கேள்விகளை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

உங்களைப் போன்ற மகளிருக்காக தமிழ்நாடு முழுவதும் இந்த ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை யார் தருகிறார்கள் என தெரியுமா என கேட்டார். அப்போது திடீரென சற்றும் எதிர்பாராத விதத்தில் கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர், “தக்காளியின் விலை 100 ரூபாயாக உள்ளது, அதன் விலையை குறைக்க வேண்டும். இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம்” என கூறினார்.

அதற்கு பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “நீங்க இதனை மோடியிடம் போய் கேளுங்கள். விலைவாசி ஏறும் இறங்கும். நாங்கள்தான் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோமே, அது மகிழ்ச்சியாக இல்லையா? என கேள்வி கேட்ட பெண்னைப் பார்த்து கூறிவிட்டு, நாங்கள் தான் ரேஷன் கடைகள் மூலமாக குறைந்த விலையில் தக்காளி கொடுக்க நடவடிக்கை எடுத்தோமே என தெரிவித்தார். அதன் பின்னர் அந்த பெண் தனக்கு ஓட்டு போடவில்லை என்றும், யாராவது சொல்லிக் கொடுத்து பேசுவார் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

ஏற்கனவே அமைச்சர் பொன்முடி பொதுமக்களை மரியாதை இன்றி ஒருமையில் பேசியது சர்ச்சை ஆகி இருந்தது. மேலும், நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பெண் ஒருவரை குறிப்பிட்டு நீ அந்த சாதியைச் சேர்ந்தவர்தானே என கேட்டார். அந்த விவகாரமும் சர்ச்சையாகி இருந்தது. தற்போது தக்காளி விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த பெண்ணை “நீ மோடியிடம் போய் கேளு” என கூறியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: 'மீண்டும் மோடி பிரதமரானால் இந்தியாவை அழித்துவிடுவார்' - சீமான் பேச்சு

ABOUT THE AUTHOR

...view details