விழுப்புரம்:செஞ்சியில் ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் நேற்று (ஜூலை 19) 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான இயற்பியல் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது காலதாமதமாக தேர்வு எழுத வந்ததாக மாணவர்களை இயற்பியல் ஆசிரியரும், உதவி தலைமை ஆசிரியருமான நந்த கோபால கிருஷ்ணன் என்பவர் கண்மூடித்தனமாக அடித்துள்ளார்.
72 மாணவர்களை இயற்பியல் ஆசிரியர் நந்த கோபாலகிருஷ்ணன் பிரம்பால் கழுத்து, முதுகு, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலமாக அடித்துள்ளார். இதனால் மாணவர்களின் உடம்புகளில் காயங்கள் ஏற்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தலைமை ஆசிரியரிடம் இது குறித்துப் புகார் அளித்துள்ளனர். அச்சமயம் அங்கு வந்த இயற்பியல் ஆசிரியர் நந்த கோபால கிருஷ்ணனை மாணவர்களின் பெற்றோர் முற்றுகையிட்டு தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தகலவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
72 மாணவர்களை பிரம்பால் அடித்த இயற்பியல் ஆசிரியர் - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்! இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் மோகன், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா மற்றும் கல்வித் துறை சார்ந்த அலுவலர்களை நேரில் அனுப்பி, உரிய விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:கோவையில் போதை சாக்லேட் விற்பனை - ராஜஸ்தான் மாநில வியாபாரி கைது!