விழுப்புரம் மாவட்டத்தில், மத்தியக் கூட்டுறவு வங்கி மூலம் மாவட்டத்தில் செயல்படும் 126 சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் அளவிலான கடன் உதவித் திட்டத்தை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "கரோனாவால் பல்வேறு தரப்பு மக்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், மக்களின் கடன் தேவை, அவசரத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் குறைந்தது 5 ஆயிரம் ரூபாயும், அதிகபட்சமாக ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.
தற்போது ஏழு விழுக்காடு வட்டியில் கடன் வழங்கப்படும் நிலையில், முதல் ஆறு மாதங்களுக்கு கடனை திருப்பி செலுத்த தேவையில்லை. ஆறு மாதங்கள் கழித்து சம தவணையில் கடன் தொகை வட்டியுடன் வசூலிக்கப்படும். இந்தத் திட்டம் செப்டம்பர் 30 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். தேவைப்படும் பட்சத்தில் இத்திட்டம் நீட்டிக்கப்படும்.