தமிழ்நாடு

tamil nadu

7 முறை மனு கொடுத்த 90 வயது கன்னியம்மாள் பாட்டி - கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

விழுப்புரத்தில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டதாகக் கூறி 90 வயது மூதாட்டி ஆறு முறை மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் இம்முறையாவது நடவடிக்கை எடுக்குமா என மூதாட்டி எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

By

Published : Aug 10, 2022, 10:37 PM IST

Published : Aug 10, 2022, 10:37 PM IST

Updated : Aug 10, 2022, 11:02 PM IST

Etv Bharat 7 முறை மனு கொடுத்த மூதாட்டி
Etv Bharat 7 முறை மனு கொடுத்த மூதாட்டி

விழுப்புரம் மாவட்டத்தைச்சேர்ந்தவர் கன்னியம்மாள் (90). இவர் இன்று (ஆக. 10) காலை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு, ஏழாவது முறையாக வெள்ளை காகிதத்தில் தனது மனுவை எழுதி கொடுத்துவிட்டு, வெகு நேரமாக உட்கார்ந்திருந்தார்.

தனக்கே உண்டான வயோதிகத்தில் மிகவும் மன குமுறுலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கும் நீதி கிடைக்காதா என பரிதாபமாக உட்கார்ந்திருந்தார். இவருக்கு அங்கிருந்த பெண் காவலர்கள் உணவளித்து, அவரது பசியை ஆற்றினர்.

யார் இந்த கன்னியம்மாள்? ஏன் ஏழு முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறார்? என்ன பிரச்னை என்பது குறித்து காணலாம். கன்னியம்மாளின் பெரியம்மா வகையில் வந்த பேரன் சண்முகன் என்பவர், கன்னியம்மாளின் சொத்தை அபகரித்துவிட்டு, கன்னியம்மாளை நடுவீதிக்குத் தள்ளியுள்ளார். வயதான காலத்தில் தன்னால் சண்டையிட முடியாது என்பதற்காக இந்த அரசையும், இந்த நீதிமன்றத்தையும் நாடி வந்திருந்தார், கன்னியம்மாள் பாட்டி.

ஆனால், கன்னியம்மாளின் எண்ணமும், நம்பிக்கையும் பொய்த்துபோனது என்றே கூறலாம். கடந்த பல நாள்களாக ஆட்சியரிடம் இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருந்தும் இந்த வயதில், வேகாத வெயிலில் பல முறை ஆட்சியர் அலுவலகம் சென்று புகார் அளித்திருக்கிறார். ஆறு முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் தற்போது ஏழாவது முறையாகப் புகார் அளிக்க வந்திந்தார், கன்னியம்மாள்.

புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், எத்துனை முறை அலைக்கலைத்தாலும் தான் மீண்டும் மீண்டும் புகார் அளிக்க வருவேன் என தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். தனது கடைசிக்காலத்தில் வாழ்வதற்காக ஓர் இடம் வேண்டும் என்பதற்காக, பறிகொடுத்த சொத்தை மீட்டுத்தரக்கோரி, இந்த அலுவலகத்திற்கு பல முறை வந்து செல்கிறார். இந்த கன்னியம்மாளின் புகாரை ஏற்று, இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி கன்னியம்மாளிடம் மட்டுமல்ல அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள், காவல் துறையினர் உள்பட அனைவருக்கும் எழுந்துள்ளது.

இது குறித்து கன்னியம்மாளிடம் கேட்டபோது, அவரால் பேசுவதற்கான உடல் வலிமை கூட இல்லை. இதனால், அவருடன் வந்தவர் மெல்ல பேச ஆரம்பித்தார். “தனக்கும் கன்னியம்மாளுக்கும் வாரிசுகள் இல்லை. நாங்களாகவே எங்களை பார்த்துக்கொள்கிறோம். இந்நிலையில் கன்னியம்மாளின் பெரியம்மா வகையில் வந்த பேரன் சண்முகன் என்பவர் அவர்களுடைய சொத்துகளை அவருடைய அத்தைகளுக்கு விற்றுவிட்டு, தற்போது தங்களுடைய 2 சென்ட் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்.

இது பற்றிய வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் நீதிமன்ற உத்தரவு யாருக்கு சாதகமாக வருகிறதோ அவர்கள் இரண்டு சென்ட் இடத்தை எடுத்துக்கொள்ளட்டும். அதற்கு முன்னதாக ரோடு போடுவதும், ரோட்டின் நடுவில் குழிகளைத்தோண்டி தண்ணீர் வசதி ஏற்படுத்திக்கொள்வதும், வீட்டு வரிக்கு ஏற்பாடு செய்து கொள்வதும், மின்சார இணைப்பை வாங்கி உபயோகிப்பதும், அத்துமீறும் வகையில் கட்டடங்களை எழுப்பியும் வசித்து வருகிறார், சண்முகன்.

சரி இரண்டு சென்ட் இடத்திற்கான பணத்தை கொடுத்து விடு, நாங்கள் அதனை வைத்து வாழ்ந்து கொள்கிறோம் என பலமுறை கேட்டும் அதற்கும் சண்முகம் செவி சாய்க்கவில்லை. இதனைத்தட்டி கேட்டால் எங்களை காலால் உதைக்கிறார். மிகவும் வயதான எங்களால் என்ன செய்ய முடியும்.

ஏழைகளாகிய எங்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றமே. நீதிமன்ற உத்தரவு வருவதற்கு முன்னமே கட்டடம் கட்டி அனுபவித்து வரும் சண்முகனை கண்டிக்குமாறு ஆறு முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் காலில் விழுந்தும் எந்த தீர்வும் இதுவரை எட்டப்படவில்லை.

எனவே, எங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று’ இன்றும் வெள்ளை காகிதத்தில் மனு ஒன்றை எழுதிக் கொண்டு தனக்கே உரித்தான சோக நிலையில் அமர்ந்திருந்தார் கன்னியம்மாள்.

90 வயது வயது மூதாட்டியின் வேதனை

’’பணம் இருப்பதால் சண்முகன் எதையும் சாதிக்கிறார். நாங்கள் ஏழை என்பதால் தற்பொழுது மாவட்ட ஆட்சியரை நாடி வந்திருக்கிறோம். ஆறு முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த எங்களை வெள்ளைத்தாளில் காவல் துறையினர் கையெழுத்து வாங்கியது மட்டுமே மிச்சம்” என்றார்.

மேலும், ''ஆறு முறை மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம், இம்முறையாவது எங்களது புகாரை ஏற்று விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை பதிவிட்டால் மட்டுமே இனி விவசாயிகளுக்கு நிதி!

Last Updated : Aug 10, 2022, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details