மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் கல்வி பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு 'தேசிய நல்லாசிரியர் விருது' வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கான 'தேசிய நல்லாசிரியர் விருது'க்கு நாடு ழுழுவதும் இருந்து 47 ஆசிரியர்களை மத்திய கல்வி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் திலீப், சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவரும் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு செப்டம்பர் 5ஆம் தேதி தில்லி விக்யான் பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த விருதினை வழங்க உள்ளார். இதில் ஆசிரியர் திலீப் மாணவர்களின் கற்றல் திறனை எளிமையாக்க பல புதிய முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.
இவர் தனது மாணவர்களுக்கு புதுமையான முறையில் ஆங்கிலத்தை முழுமையாக கற்றுக்கொடுக்கிறார். ஒரு எழுத்து, அதில் தொடங்கும் ஒரு பழத்தின் பெயர், அதில் ஒரு வார்த்தை, ஒரு வாக்கியம், ஒரு பாரா என மாணவர்களை எழுத பழுக்குகிறார். இதன் மூலம் மாணவர்களின் உச்சரிப்பு, எழுத்து திறமை, மொழியறிவு, சிந்தனை ஆகியவற்றை மேம்படுத்துகிறார். இதனால் மாணவர்களுக்கு கற்றல் திறன் எளிமையாக்கப்படுகிறது. கடந்த 2000ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக தனது பணியை தொடங்கிய இவர், தனது இருபது ஆண்டு கல்வி பணியில் பல விருதுகளை வென்றுள்ளார். இவர் ஏற்கனவே 2012ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்துக்கான தேசிய விருதினை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையால் பெற்றுள்ளார். மேலும் 2014ஆம் ஆண்டு சிறந்த ஆசிரியருக்கான விருதை அப்போதைய விழுப்புரம் ஆட்சியரிடமும், 2019இல் தமிழ்நாடு அரசின் கனவு ஆசிரியர் விருதையும் பெற்றுள்ளார்.