தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் புகழேந்தி பற்றிய சிறப்பு தொகுப்பு

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளராக நா.புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு உங்கள் பார்வைக்கு...

n-pughazhenthi-is-dmk-candidate-in-vikravandi

By

Published : Sep 24, 2019, 6:42 PM IST

தமிழ்நாட்டில் காலியாக இருந்துவரும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் களம் காண்கின்றன. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடவுள்ள நிலையில், இதற்கான நேர்காணல், வேட்பாளர் தேர்வு என அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் நிலையில், இன்று திமுக வேட்பாளராக நா.புகழேந்தியை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

யார் இந்த புகழேந்தி?

விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் திருவாதி பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி-தனம்மாள் தம்பதியின் மகனாகப் பிறந்தார்.
1954-ஆம் ஆண்டு பிறந்த இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.

விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவருக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், செல்வகுமார் என்ற மகனும், செல்வி, சுமதி, சாந்தி என்ற மகள்களும் உள்ளனர்.

விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் புகழேந்தி

சிறுவயது முதலே திமுகவில் இருந்த இவர் 1973ஆம் ஆண்டு அத்தியூர் திருவாதி கிராமத்தின் கிளை கழகச் செயலாளராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து திமுகவில் மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர், ஒன்றிய பொறுப்பாளர் மற்றும் கோலியனூர் ஒன்றிய கழகச் செயலாளராக இரண்டு முறை பணியாற்றியுள்ளார்.

தொடர்ந்து 1997ஆம் ஆண்டு முதல் தலைமை செயற்குழு உறுப்பினராகவும், 2009ஆம் ஆண்டு முதல் ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டத்தின் பொருளாளராகவும், 2015ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் புகழேந்தி

கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த இவர் 1987ஆம் ஆண்டு இந்தியை எதிர்த்து சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து, ராணி மேரி கல்லூரி இடிப்பு போன்ற சம்பவங்களிலும் ஜெயலலிதா அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார்.
இதற்காக அவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

தற்போது விக்கிரவண்டி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நா. புகழேந்தி கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details