தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஜனநாயகத்தைக் காப்பாற்ற மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்' - டி. ராஜா

விழுப்புரம்: நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற மதச்சார்பற்ற கட்சிகளும் பொதுமக்களும் ஒன்றிணைய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி. ராஜா வலியுறுத்தியுள்ளார்.

By

Published : Mar 11, 2020, 11:32 AM IST

செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா
செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா, மாநிலச் செயலாளர் ரா. முத்தரசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டி. ராஜா, "தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டத்தில் மத்திய, மாநில அளவிலான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. குடியுரிமை திருத்தச் சட்டத்தை, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இதனால், எவ்வித பாதிப்பும் இல்லை என்றால் அது குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்க வேண்டும்.

நாட்டில் பிறப்பு உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாத ஏழைகளே அதிகமாக உள்ளனர். இச்சட்டங்களால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனை எதிர்த்து இரண்டு மாதங்களாகப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

டெல்லி வன்முறை சம்பவத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறை சம்பவம் கண்டிக்கத்தக்கது. உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல் துறையினர் கலவரத்தை வேடிக்கைப் பார்த்தது கண்டனத்துக்குரியது.

இச்சட்டத்துக்கு எதிராகப் போராடுபவர்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்றும், வன்முறையைத் தூண்டும்விதமாகவும் பேசிய பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், டெல்லி சம்பவத்துக்குப் புலன் விசாரணை நடத்திட வேண்டும்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவிடாமல், மத்திய அரசே மன்றத்தை முடக்குவது ஜனநாயகம் படுகொலையாகும். இப்போராட்டங்களின்போது மங்களூரு, உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட காவல் துறையினரின் வன்முறை செயல் கண்டிக்கத்தக்கது.

புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் இச்சட்டங்களுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு மக்கள்விரோத நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்துள்ளது. பொது நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மோசமான நிலை உள்ளது. தவறான பொருளாதார கொள்கையால் நிர்வாகம் படுதோல்வி அடைந்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா

பிரதமர் மோடி சொன்ன இரண்டு கோடி பேருக்கான வேலை எங்கே போனது? விவசாயிகளுக்கு இருமடங்கு வருமான திட்டமும் இல்லை. சிறு, குறு தொழில்கள் நலிந்துவருகின்றன. உள்நாட்டின் மொத்த உற்பத்தி வீழ்ச்சி அடைந்து பணவீக்கம் அதிகரித்துள்ளது.

இதனை மீட்பதற்குப் பதிலாக மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. இதனால், நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற மதச்சார்பற்ற கட்சிகள், பொதுமக்கள் ஒன்றிணைய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: 'இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' - நல்லகண்ணு அரூரில் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details