விழுப்புரம்:ஜல் ஜீவன் திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போலியாக குழாய்கள் பதிக்கப்பட்டு மோசடி நடைபெற்றதை நமது ஈடி பாரத் தமிழ் செய்திகள் கடந்த 22-ம் தேதி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. அதே பாணியில் ஒரு மோசடி சம்பவம் ஒன்று விழுப்புரம் மாவட்டத்திலும் அரங்கேறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் அடுத்த ஒழிந்தியாம்பட்டு கிராமத்தில் 15-வது மாநில நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் சுமார் 752 மீட்டர் தூரத்திற்கான குழாய்கள் பதிக்கப்பட்டு 40 குடிநீர் குழாய்கள் பதிக்க 3 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் நிதியாக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊராட்சி மன்றத் தலைவரான திமுகவைச் சேர்ந்த சுலோச்சனா மற்றும் அவரது மகன் சக்திவேல் ஆகியோர் 40 சிமெண்ட் கற்களை புதைத்து அதில் டம்மி(போலி) குழாய்களை மட்டுமே பதித்து குடிநீர் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிவிட்டதாக போலியான கணக்கு காட்டியுள்ளனர்.