வேலூர்: வேலூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் நடக்கும் கஞ்சா கடத்தலை தடுக்க உதவி ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். விரிஞ்சிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், தெள்ளூர் கூட்டுச் சாலையில் புல்லட் வாகனத்தில் ராணுவ சீருடையுடன் நின்ற நபரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
ராணுவ சீருடை அணிந்த நபர், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து, ராணுவ வீரருக்கான அடையாள அட்டைக்கு பதிலாக வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து ரகளை செய்துள்ளார். இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிடிபட்டவர் கேரளாவைச் சேர்ந்த முகமது பஷீர் என்றும், ஒடிசாவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்ததும் தெரியவந்துள்ளது.